

புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பி.என்.பி. வங்கி கடன் மோசடி உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி உள்ளன. அமளியை காரணம் காட்டி, மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இன்றும் பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியபோது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதன் காரணமாக மக்களவை முதலில் 12 மணி வரையிலும், பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் இதே நிலை நீடித்தது. உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக முதலில் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் தெரிவித்தன. 2 மணிக்கு அவை கூடியபோது, அவையை நடத்திய துணை சபாநாயகர் குரியன், அமைதியாக இருந்தால் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரான குலாம் நபி ஆசாத், பா.ஜ.க. எம்.பி. விஜய் கோயல் ஆகியோர் பேசினர். ஆனால் உறுப்பினர்களின் அமளி குறைந்தபாடில்லை.
இதனால் 15 நிமிடம், 30 நிமிடங்கள் என அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. மாலை 5 மணிக்குள் 10 முறை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னரும் அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதன்மூலம் இன்று மட்டும் மாநிலங்களவை 11 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவே, இந்த கூட்டத் தொடரில் அதிகபட்ச ஒத்திவைப்பு ஆகும்.
பெரும்பாலும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு அவையில் அமளி நீடித்தால் நாள் முழுவதும் அவையை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்துவிடுவார். ஆனால், இன்று அமளிக்கிடையே எப்படியாவது விவாதத்தை நடத்த வேண்டும் என்பதற்காக அவ்வப்போது சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அமளிக்கிடையே ஊழல் தடுப்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமளி நீடித்ததால் மசோதா நிறைவேறவில்லை. #tamilnews #parliament #rajyasabha #cauveryissue