மத்திய மந்திரிகளுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு- கூட்டணி பேச்சுவார்த்தை தொடக்கம்?

டெல்லி சென்றுள்ள தமிழக அமைச்சர்கள் இன்று மத்திய மந்திரிகளை சந்திக்க உள்ளனர். அப்போது கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என தெரிகிறது. #BJP #ADMK #ParliamentElection
மத்திய மந்திரிகளுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு- கூட்டணி பேச்சுவார்த்தை தொடக்கம்?
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு எதிராக தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி உருவாகியுள்ளது.

இந்த அணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

பலம் வாய்ந்த கூட்டணியாக பார்க்கப்படும் இந்த அணியை எதிர்கொள்ள பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தயாராகி வருகின்றன. மத்தியில் உள்ள பா.ஜனதா அரசுடன், தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. நெருங்கிய நட்புடனேயே உள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டது.

நாடு முழுவதும் வீசிய மோடி அலையை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனி ஆளாக களம் இறங்கிய ஜெயலலிதா 37 தொகுதிகளில் வெற்றியை ருசித்தார். ஆனால் இப்போது அது போன்ற சூழல் இல்லை. கடந்த தேர்தலில் தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்றதைபோல இந்த முறை அ.தி.மு.க.வால் கண்டிப்பாக வெல்ல முடியாது என்கிற நிலையே உள்ளது. இதனால் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க. வில் இருந்து விலகிச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அக்கட்சியில் சேர்வதற்கு பாரதிய ஜனதாவே பக்க பலமாக இருந்தது. ஒன்றுப்பட்ட அ.தி.மு.க.வுடன் எதிர்காலத்தில் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்திலேயே பா.ஜனதா இந்த முயற்சியை மேற்கொண்டது. இப்போது அதற்கான காலம் கனிந்துள்ளது என்றே கூறலாம்.

கடந்த தேர்தலிலேயே ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க பா.ஜனதா விரும்பியது. ஆனால் அவரோ யாரும் வேண்டாம் என்று தனியாக நின்றார். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி, எப்போதும் அ.தி.மு.க. மீது தனி பாசம் கொண்ட கட்சியாகவே இருந்து வந் துள்ளது.

பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி உருவாகியுள்ளது. இந்த அணியை சமாளிக்க தங்களோடு ஒருமித்த கருத்தோடு இருக்கும் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி தமிழகத்திலும் கூட்டணி அமைப்பதில் அக்கட்சி தீவிரமாகி உள்ளது. இதற்காக அ.தி.மு.க.வுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற தொடங்கியுள்ளது.

தமிழக அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி இருவரும் நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றனர். மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அருண் ஜெட்லி ஆகியோரை இருவரும் இன்று சந்தித்து பேசுகிறார்கள்.

இந்த சந்திப்பின்போது, தமிழக திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்குவது தொடர்பாக இருவரும் பேச உள்ளனர். அதே நேரத்தில் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணி பற்றி பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை வருகிற பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார். ஜனவரி மாத இறுதியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வகையில் பிரதமர் மோடியின் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதற்குள் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்க 2 கட்சி நிர்வாகிகளும் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் பிரதமர் மோடி புத்தாண்டில் தமிழகம் வரும்போது பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. #BJP #ADMK #ParliamentElection

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com