பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.இதனால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
பாலக்கோடு மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள தக்காளி பெட்டிகள்.
பாலக்கோடு மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள தக்காளி பெட்டிகள்.
Published on

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டிற்கு தினந்தோரும் 100டன் அளவிற்கு தக்காளி வரத்து உள்ளது. இச்சந்தையில் இருந்து தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டிற்கு பாலக்கோடு சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் பென்னாகரம், மாரண்டஅள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்த தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

தற்போது கடந்த சில வாரங்களாக தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு வரும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. தக்காளி வரத்து அதிகரித்ததால் கொள்முதல் விலை கிலோ 5 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்ற வாரங்களில் ஒரு கிலோ 30 முதல் 60 ரூபாய்வரை விற்பனையான தக்காளி தற்போது கொள்முதல் விலை 5 ரூபாயாகவும் விற்பனை விலை 7 ரூபாய்முதல் 10 ரூபாய்வரையும் விற்பனையாகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் கடும் வறட்சியிலும் விவசாயிகள் தண்ணீரை டிராக்டரில் கொண்டுவந்து தக்காளியை சாகுபடி செய்தனர். இந்நிலையில் தக்காளி மகசூல் தரும் இம்மாதத்தில் விலை கடுமையாக குறைந்ததால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

எனவே, தக்காளியின் மதிப்பை கூட்டும் வகையில் பாலக்கோட்டில் தக்காளி கூழ்தொழிச்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com