கட்சியின் பெண் உறுப்பினர்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி: இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தல்

இம்ரான் கான் தனது கட்சியின் பெண் உறுப்பினர்களுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அவரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்சியின் பெண் உறுப்பினர்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி: இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தல்
Published on

பாகிஸ்தானில் உள்ள பிரதான எதிர்க்கட்சியான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மீது அவரது சொந்த கட்சியை சேர்ந்த பெண் எம்.பி ஒருவர், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

தெற்கு வஜிரிஸ்தான் பழங்குடியின பகுதியைச் சேர்ந்த ஆயிஷா குலாலாய் எம்.பி இம்ரான் கான் கட்சியில் இருந்து விலகியதோடு அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “கட்சியில் பெண்களை மிகவும் மோசமாக நடத்தியதாலேயே இம்ரான் கானின் கட்சியில் இருந்து விலகினேன். இம்ரான் கான் கடந்த மூன்று ஆண்டுகளாக எனக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை அளித்து வருகிறார். வேறு சில உறுப்பினர்களுக்கும் இதுபோன்ற செய்திகளை அனுப்பியிருக்கிறார். தற்போது அவரது தொல்லை பொறுக்க முடியாததாலேயே கட்சியிலிருந்து வெளியேறி உள்ளேன்.

தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. இம்ரான் கானின் நடவடிக்கையை எந்த பெண்ணும் சகித்துக்கொள்ள மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தனது எம்.பி பதவியையும் ராஜினாமா செய்துள்ள ஆயிஷா, நவாஸ் ஷெரீப் கட்சியில் தான் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆயிஷாவின் இந்த குற்றச்சாட்டுக்களை இம்ரான்கான் கட்சியினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.  

‘வரும் தேர்தலில் மீண்டும் தனக்கு சீட் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என குலாலாய் கேட்டுள்ளார். கட்சி மேலிடம் அதனை ஏற்காததால், குற்றச்சாட்டுக்களை கூறுகிறார்’ என கட்சியின் ஷிரீன் மசாரி கூறியுள்ளார்.

பெண் உறுப்பினர்களை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதால் இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்மசி தலைவர் ஷினா பர்வேஸ் பட் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com