பா.ஜனதாவுக்கு எதிராக தி.மு.க. தலைமையில் திரளும் கட்சிகள்

அ.தி.மு.க.வுடன் கைகோர்க்கும் பாரதிய ஜனதாவுக்கு எதிராக தி.மு.க. தலைமையில் திரளும் கட்சிகள் மெகா கூட்டணிக்கு அச்சாரம் போடுவதாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
பா.ஜனதாவுக்கு எதிராக தி.மு.க. தலைமையில் திரளும் கட்சிகள்
Published on

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகிறது.

இரண்டாக பிளவுபட்ட அ.தி.மு.க. அணிகள் ஒன்று சேருமா? சேராதா? என்கிற எதிர்பார்ப்பு 6 மாதங்களுக்கு பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் மூலமாகவே பூர்த்தியாகி உள்ளது.

இரு அணிகளையும் இணைப்பதில் டெல்லியில் உள்ள பா.ஜனதா மேலிடம் தீவிரம் காட்டியதாகவும், அதன் காரணமாகவே இணைப்பு சாத்தியமானது என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வலுவாக காலூன்றி விட வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் திட்டமாக உள்ளது. சமீபத்தில் பீகார் அரசியல் களத்தில் நடந்த அதிரடி மாற்றங்களே இதற்கு சிறந்த உதாரணமாகும்.

லல்லு பிரசாத்-நிதிஷ் குமார் கூட்டணியை உடைத்து அங்கு ஆட்சி கட்டிலில் அமர்ந்தது பா.ஜனதா. கூட்டாளிகளாக இருந்த அவர்கள் இருவரையும் பிரித்து நிதிஷ்குமாருடன் கைகோர்த்து தங்கள் கனவை நனவாக்கி கொண்டனர் பா.ஜனதா தலைவர்கள். இப்படி மாநில கட்சிகளின் மீது ஏறி குதிரை சவாரி செய்து பின்னர் அங்கு தங்களது கட்சியை வளர்த்துக் கொள்வதே பா.ஜனதா தலைவரான அமித்ஷா வின் வியூகமாக உள்ளது.

தமிழகத்திலும் அதே பாணியில் கட்சியை வளர்க்க பா.ஜனதா தலைவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முடிவு செய்த பா.ஜனதா கட்சி அது தொடர்பான காய்களை அரசியல் சதுரங்கத்தில் வேகமாகவே நகர்த்தி வருகிறது.

எடப்பாடி- ஓ.பி.எஸ். அணிகளின் இணைப்பு அதற்கான முதல் படியாகவே பார்க்கப்படுகிறது. ஒன்று பட்ட அ.தி.மு.க.வை உருவாக்கி இரட்டை இலை சின்னத்தையும் பெற்று, விட்டால் அ.தி.மு.க.வோடு இணைந்து தேர்தல் களத்தில் குதித்து வெற்றிக் கனியை பறித்துவிடலாம் என்பதே பா.ஜனதாவின் கணிப்பாக உள்ளது.

இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், பா.ஜனதாவுக்கு எதிராக புதிய வியூகத்தையும் வகுத்துள்ளன.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒன்று திரண்டு, பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியை எதிர் கொள்ள அக்கட்சிகள் தயாராகி வருகின்றன. தி.மு.க.வை வைத்தே பா.ஜனதாவுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளே இடம் பெற்றிருந்தன. தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் தனியாக களம் கண்டன. ஆனால் அது பெரும் தோல்வியில் முடிந்தது.

தற்போது, தே.மு.தி.க.வை தவிர, மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த அனைத்து கட்சிகளும் தி.மு.க. கூட்டணியில் சேர தயாராக இருப்பதாகவே கூறப்படுகிறது. புதிதாக மேலும் பல கட்சிகள் சேரும் போது தி.மு.க. கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாகவே மாறும்.


தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக இப்போதே எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதும் உறுதியாகி இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக நாளை ‘நீட்’ தேர்வுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக பங்கேற்கின்றன.

செப்டம்பர் 5-ந்தேதி சென்னையில் நடக்கும் முரசொலி விழாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

செப்டம்பர் 21-ந்தேதி திருமாவளவன் நடத்தும் மாநாட்டிலும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com