முதல்வர் பழனிசாமியுடன் எந்த மன வருத்தமும் இல்லை: துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி

முதல்வர் பழனிசாமியுடன் எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமியுடன் எந்த மன வருத்தமும் இல்லை: துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி
Published on

புதுடெல்லி:

தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஓ.பி.எஸ் நேற்று டெல்லிக்கு சென்றார். இன்று காலை பிரதமர் அலுவலகத்துக்கு சென்ற அவர் அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அதன்பின்னர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். முதல்வர் பழனிசாமியுடன் எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை. கட்சியிலும் ஆட்சியிலும் எங்கள் அணியினர் ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுவது உண்மையில்லை.

எந்தவித நிபந்தனைகளும் இன்றி இரு அணிகளும் இணைந்துள்ளன. அதிமுகவில் இனி பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை. கீழ்மட்ட அளவில் இருந்து உழைத்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பிரதமர் மோடியுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. தமிழக வளர்ச்சி குறித்த கோரிக்கை மனு பிரதமரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

மின்சார தேவைக்கான நிலக்கரி பற்றாக்குறை குறித்து முதல்வர் பழனிசாமி வழங்கிய கடிதத்தை பிரதமரிடம் வழங்கினேன். உடனடியாக தமிழகத்துக்கு தேவைப்படும் நிலக்கரியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பான தடுப்பு பணிகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தோம். டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஓரளவு வெற்றிபெற்றுள்ளது. மத்திய அரசின் மருத்துவக் குழு தமிழகத்திற்கும் வரும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.

மேலும், துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com