

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில், அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, கழக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை கோர்ட்டு எதிரே உள்ள மைதானத்தில் நடந்தது.
கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தர்மயுத்தம் தொடங்கப்பட்டு 7-வது கூட்டம் இங்கு நடைபெறுகிறது. இது மாநாடு போல் நடக்கிறது. மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் 45 ஆண்டு காலம் காவல் தெய்வமாக இருந்து அ.தி.மு.க.வை எக்கு கோட்டையாக, தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கி உள்ளனர். இங்கு கூடியிருக்கிற கூட்டம், ‘நெல்லை இனி அவர்களுக்கு இல்லை’ என்பதை நிரூபித்துக் காட்டி விட்டது.
எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கிய போது உடனிருந்த தலைவர்கள், தொண்டர்கள் இன்று நம்பக்கம் இருக்கின்றனர். இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்கு இங்கு கூடி உள்ளனர். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 27 ஆண்டுகள் ஆண்ட பெருமை அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உள்ளது. இந்த பெருமையை அடைவதற்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோடு சேர்ந்து உழைத்தவர்கள் இன்று நம்முடன் உள்ளனர். இருபெரும் தலைவர்களின் கொள்கையால் கட்சி இத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளது. அவர்கள் தொண்டர்களின் இயக்கமாக அ.தி.மு.க.வை வளர்த்து உள்ளனர்.
ஆனால் இன்று நிலைமை வேறு விதமாக உள்ளது. ஆட்சி யாரிடம் உள்ளது என்பதை மக்களாகிய நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். இந்த சூழ்நிலையில் தி.மு.க. ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலின் காத்து கிடக்கிறார்.
2011-ம் ஆண்டு சசிகலா உள்பட அவரது குடும்பத்தினர் 16 பேரை ஜெயலலிதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கிவிட்டார். 3 மாதம் கழித்து சசிகலா திரும்பி வந்த போது, ஜெயலலிதா உதவியாளராக மட்டுமே சேர்த்துக் கொண்டார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள், ஜெயலலிதா மரணம் வரை கட்சியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் அவர்கள் தற்போது பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் ஆகிக் கொண்டனர். அத்தகைய துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது.
அந்த கும்பலிடம் இருந்து கட்சியை காப்பாற்றவே இந்த தர்ம யுத்தம் நடக்கிறது. ஜெயலலிதா 74 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சு அவிழும் வரை இந்த தர்ம யுத்தம் தொடரும் என்று நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நடப்பது ஜெயலலிதாவின் அரசு கிடையாது. ஜெயலலிதாவின் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்காக 96 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டார். அது நிறைவேற்றப்படவில்லை. ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அனைத்தும் கைவிடப்பட்டு விட்டன.
ரூ.7 ஆயிரம் கோடியில் சென்னை பகுதிக்கு வரவேண்டிய, 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டிய தொழிற்சாலை, ஆந்திரா மாநிலத்துக்கு போய்விட்டது. அம்மா உணவகம் சரியாக இயங்கவில்லை. அங்கு வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என்று புகார் வருகிறது. அம்மா குடிநீர் தாராளமாக கிடைக்கவில்லை. தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காண்பதில்லை. ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்க்கின்றனர். இதுதான் தமிழக அரசின் நிலைமை ஆகும்.
எடப்பாடி அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். சசிகலாவின் பினாமி ஆட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்துமா? உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் நமது தலைமையில் அமையும் என்பதை நெல்லை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நிரூபித்து விட்டது. அத்தகையை நிலைமை கூடிய விரைவில் வரும்.
சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பெரிய அளவில் நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதில் கருத்தரங்கு, கவியரங்கமும் நடைபெறும். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய போது உறுதுணையாக இருந்த பலரது குடும்பங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ் சரித்திரத்தில் இடம் பெறும்வகையில் அந்த விழா நடத்தப்படும். மேலும் அன்று ஜெயலலிதாவுக்கு சிலை வைத்து திறக்கப்படும்.
ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைப்பதே நமது லட்சியம். அதற்கு அனைவரும் ஒன்று படுவோம், வெற்றி பெறுவோம். நாம்தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை நிரூபிப்போம்.