

சென்னை:
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ந்தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இன்று காலை 8.05 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். கொரோனாவுக்கு தமிழகத்தில் எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
ஜெ.அன்பழகன் மறைவிற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கனிமொழி எம்.பி, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அமமுக பொதுச் செயலாளர் தினகரன், தமிழக பாஜக தலைவர் முருகன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.