குல்பூஷன் ஜாதவை சந்திக்க 2வது முறை அனுமதி கிடையாது - பாகிஸ்தான்

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை சந்திக்க தூதர்களுக்கு இனி அனுமதி கிடையாது என அந்நாட்டு வெளியுறவுத்துறை கூறியதாக தகவல்கள் வெளியானது.
குல்பூஷன் ஜாதவ்
குல்பூஷன் ஜாதவ்
Published on

இஸ்லாமாபாத்:

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் (48), இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’விற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், மோதல்கள் நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை அவசரமாக விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. 

ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. ஜாதவ், கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஈரானில் தனது சொந்த வியாபார நிமித்தமாக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டார் என்று இந்தியா தெரிவித்தது. அத்துடன் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்ததை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டில் தி ஹேக் நகரில் செயல்பட்டு வரும் சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாடியது. 

இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷனின் மரண தண்டனையை நிறுத்தி வைத்தது.

இருதரப்பிலும் விரிவான மனுக்கள் மற்றும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி முதல் சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது.

இருதரப்பு விவாதங்கள் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம், இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது.

அதில், குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தியா சார்பில் வழக்கறிஞரை வைத்துக் கொள்ளலாம். உறவினர்களை  பார்க்கலாம் என உத்தரவிட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை, இந்திய தூதர்கள் சந்திக்க இனி அனுமதி அளிக்கப்படமாட்டாது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி முகம்மது பைசல் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே, இந்த மாத தொடக்கத்தில் குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தானுக்கான இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியா ஒரு மணி நேரம் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com