அரியானாவில் முதலமைச்சரை மாற்ற திட்டமா? - பா.ஜ.க. தலைவர் அமித் ஷா பேட்டி

அரியானா மாநிலத்தில் முதலமைச்சரை மாற்ற பா.ஜ.க. மேலிடம் திட்டமிட்டுவருவதாக வெளியான தகவல்கள் குறித்து கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பதில் அளித்துள்ளார்.
அரியானாவில் முதலமைச்சரை மாற்ற திட்டமா? - பா.ஜ.க. தலைவர் அமித் ஷா பேட்டி
Published on

சண்டிகர்: 

பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் அரியானா மாநிலத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. வளர்ச்சிப் பணிகள் மந்தமாக நடைபெறுவதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக பல்வேறு நிகழ்வுகளில் முதலமைச்சர் மனோகர் லால் கத்தாருக்கு எதிராக பேசி வருகின்றனர். எனவே, முதலமைச்சர் பதவிக்கு வேறு ஒருவரை பா.ஜ.க. தலைமை நியமிக்கலாம் என்ற பேச்சு பரவலாக அடிபட்டது.

இந்த சூழ்நிலையில், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று அரியானா மாநிலத்திற்கு வந்தார். சண்டிகர் பிரஸ் கிளப்பில் அவர் நிருபர்களை சந்தித்தபோது, முதலமைச்சர் மாற்றம் தொடர்பாக வெளியான செய்திகள் குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமித் ஷா, ‘பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களிடையே மோதல் இருப்பதாக வெளியான செய்திகள், ஊடகங்களால் மிகைப்படுத்தப்பட்டவை. கட்சி தலைமைக்கு அப்படி எந்த புகாரும் வரவில்லை. மனோகர் லால் கத்தார் முதலமைச்சராக தொடர்ந்து பணியாற்றுவார். அவரை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்தபோதும், ஷிரோமணி அகாலி தளம்-பா.ஜ.க. கூட்டணி தொடரும். பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க சில இடங்களில் மட்டுமே போட்டியிட்டது’ என்றார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் 11 எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என பா.ஜ.க. தலைவர் கூறியதாக வெளியான தகவல் குறித்து கேட்டபோது, ‘அப்படி யாரும் தொடர்பில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அது தவறான தகவல்’ என்றார் அமித் ஷா.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com