பிரிக்ஸ் மாநாட்டில் பாகிஸ்தான் பற்றி விவாதங்கள் இல்லை - சீனா

சீனாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் தீவிரவாதம் குறித்து விவாதிக்க வாய்ப்புகள் இல்லை என அந்நாடு தெரிவித்துள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டில் பாகிஸ்தான் பற்றி விவாதங்கள் இல்லை - சீனா
Published on

பீஜிங்:

பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருவதாகவும், அங்கு செயல்பட்டு வருகிற லஷ்கர் இ தொய்பா, அல் கொய்தா, தலீபான், ஹக்கானி நெட்வொர்க் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கருதுகின்றன.

இந்த நிலையில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் வகிக்கிற ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 9-வது உச்சி மாநாடு நாளை மறுதினம் (3-ந் தேதி) சீனாவில் ஸியாமின் நகரில் தொடங்குகிறது.

இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவருடன் பிரேசில் அதிபர் மிச்செல் டெமர், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோரும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

ஏற்கனவே, பயங்கரவாதத்துக்கு துணை போகிற பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டிலும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டால் அது அந்த நாடு பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அழுத்தம் தருவதாக அமையும்.

ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என்று சீனா கை விரித்து விட்டது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறியதாவது:-

பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் முன் வரிசையில் நின்று போரிட்டு வருகிறது. இதற்காக அந்த நாடு பல தியாகங்களை செய்துள்ளது. பாகிஸ்தான் செய்துள்ள பங்களிப்பையும், தியாகங்களையும் சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.

பாகிஸ்தானின் பயங்கரவாதம் தொடர்பாக இந்தியாவின் கவலைகளை கவனத்தில் கொண்டுள்ளோம். ஆனால் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் விவாதிப்பதற்கு இது பொருத்தமான விஷயம் என்று நான் கருதவில்லை.

பயங்கரவாத ஒழிப்பை பொறுத்தமட்டில் பாகிஸ்தானோடு மட்டுமின்றி பிற நாடுகளுடனும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு பாடுபட சீனா விரும்புகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன்மூலம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பாகிஸ்தானின் பயங்கரவாதம் பற்றி விவாதிக்கப்பட மாட்டாது என்பதை சீனா உறுதிப்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் இந்தியா விடுத்து வரும் கோரிக்கைக்கு சீனா தொடர்ந்து

முட்டுக்கட்டை போடுவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com