நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் என்ஜினீயரிடம் பணம் திருடிய டிக்கெட் பரிசோதகருக்கு வலைவீச்சு

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த என்ஜினீயரிடம் பணம் திருடிய டிக்கெட் பரிசோதகரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ரெயில்
ரெயில்
Published on

நெல்லை:

சென்னையை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 56). இவர் ரெயில்வே துறையில் முதுநிலை என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவில்பட்டியில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்காக புறப்பட்டு வந்தார். இதற்காக நேற்று முன்தினம் இரவு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவில்பட்டிக்கு பயணம் செய்தார். குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்த அவர் அருகில் கைப்பையை வைத்திருந்தார். மதுரை திருப்பரங்குன்றத்தை கடந்து வந்த போது அவருடைய கைப்பையை காணவில்லை. அதில் ஜேசுராஜ் ரூ.20 ஆயிரம் பணம் வைத்திருந்தார்.

அவர் அந்த பையை தேடிப்பார்த்த போது அந்த பெட்டியில் ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் பழனி மட்டும் பணியில் இருந்துள்ளார். எனவே அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் உடனடியாக அந்த பெட்டிக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கு ஜேசுராஜின் பை மட்டும் கிடைத்தது. அதிலிருந்த ரூ.20 ஆயிரத்தை காணவில்லை. டிக்கெட் பரிசோதகர் பழனியையும் காணவில்லை.

இதைத்தொடர்ந்து ஜேசுராஜ், நெல்லை ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் டிக்கெட் பரிசோதகர் பழனி மீது பணம் திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது தலைமறைவாக உள்ள பழனியை நெல்லை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com