

பிரதமர் மோடி வெளிநாட்டு உதவியால் தான் பிரதமராக ஆகியுள்ளதாகவும், வெளிநாட்டு சமூக ஊடகங்கள் அவருக்கு முழு ஆதரவு அளித்து வருவதாகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ஏக்தா நகரில் சர்தார் வல்லபாய் படேலின் 151வது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை தேசிய ஒற்றுமை தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஒற்றுமை சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திவிட்டு, நாட்டு மக்களுடன் உரையாடினார்.
அப்போது பேசிய மோடி, நாட்டை பிளவுபடுத்த சதித்திட்டங்களில் ஈடுபட்டுள்ள சக்திகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் சமூக ஊடகங்கள் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு, வதந்திகள் பரப்பப்பட்டு, இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மோடி கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், “நாடு வெளிப்புற சவால்களுக்கு தீர்வு தேடிக்கொண்டிருந்த போது, நாட்டிற்குள்ளேயே சில சக்திகள் பொய்களையும் வதந்திகளையும் பரப்பி ஸ்திரத்தன்மையை உருவாக்கின.
ஆனால் நாட்டு மக்கள் தேசத்துடன் தோளோடு தோளாக நிற்கிறார்கள். இந்த நேரத்தில் எதிர்க்கட்சியானது நாட்டின் வளர்ச்சிக்கு தடைகளாக நிற்கிறார்கள்” என கூறினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி வெளிநாட்டு உதவியால் தான் பிரதமராக ஆட்சி அமைத்து, தொடர்ந்து நீடித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இத்குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மோடி அவர்களே, இந்த தேசத்திடம் பொய் சொல்வதை நிறுத்துங்கள்.
வெளிநாட்டு உதவியால்தான் நீங்கள் பிரதமராக ஆகியுள்ளீர்கள். வெளிநாட்டு உதவியால்தான் பிரதமராகவும் நீடிக்கிறீர்கள்.
உங்கள் நிதி அமைப்பு முழுவதுமாக வெளிநாட்டினரால் கட்டுப்படுத்தப்பட்டு ஆதரிக்கப்படுகிறது. வெளிநாட்டு சமூக ஊடகங்கள் உங்களுக்கு முழு ஆதரவு அளிக்கின்றன.
இதுபற்றி ஒரு பகிரங்க விவாதத்திற்கு நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். எந்த மேடையிலும், எந்த நேரத்திலும் தைரியம் இருந்தால் வாருங்கள்.
உங்களை பற்றி எனக்கு தெரிந்ததை நினைத்து நீங்கள் பயப்படுவதால், உங்களால் துணிந்து வர முடியாது” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.