

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு உண்மை இல்லை என்றால் ஏன் அதுதொடர்பாக தன் மீது அவதூறு வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கோவாவின் மார்கோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
கோவாவின் மார்கோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று உரையாற்றினார்.
அங்கு பேசிய அவர், வாக்குத் திருட்டுக்கு பின்னால் மூன்று பேரின் ஒரு திட்டமிட்ட சதி இருந்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
ஞானேஷ் குமார் வாக்குத் திருட்டுத் திட்டத்தை செயல்படுத்தியதாகவும், அமித் ஷா அதை ஒருங்கிணைத்ததாகவும், மோடி திரைக்குப் பின்னால் இருந்து முழுத் திட்டத்தையும் வழிநடத்தியதாகவும் ராகுல் கூறினார்.
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு உண்மை இல்லை என்றால் ஏன் அதுதொடர்பாக தன் மீது அவதூறு வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
அமித் ஷா மற்றும் மோடி உள்ளிட்டோர் தாக்கல் செய்த 45க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை தான் எதிர்கொண்டு வருவதாக கூறிய அவர், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மோடி வாக்குகளைத் திருடுகிறார் என்று பகிரங்கமாகக் கூறியும், இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் தன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் ராகுல் சுட்டிக்காட்டினார்.
காங்கிரஸ் அரசியலமைப்பின் பாதுகாவலர் என்றும், வாக்கு மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராகுல் வாக்குறுதி அளித்தார்.
பிரதமர் மோடியின் '56 அங்குல மார்பு' கருத்தை கிண்டல் செய்த ராகுல் காந்தி, "அந்த 56 இன்ச் மார்பு எங்கே போனது? சமீபகாலமாக மோடிஜியின் முகத்தைக் கவனித்தீர்களா? இப்போது அவரால் எங்கள் முன்னால் நிற்கக்கூட முடியவில்லை" என்று கூறினார்.
வாக்கு மோசடி, வேலையின்மை மற்றும் அதிகரித்து வரும் கல்விக் கட்டணம் போன்ற பிரச்சினைகளை எழுப்பும் டெல்லி மாணவர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதாக ராகுல் மேலும் குற்றம் சாட்டினார். மேலும் பாஜக அரசின் பதவிக்காலம் முடியப் போகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக ஆட்சி நடைபெறும் கோவாவில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாகவும், கோவா ஊழலின் ஒரு முன்மாதிரியாக மாறிவிட்டதாகவும் ராகுல் குற்றம் சாட்டினார்.
2027 கோவா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு முழுப் பெரும்பான்மையை அளிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கோவாவின் 40 சட்டமன்றத் தொகுதிகள் வழியாக காங்கிரஸின் 'கோய் ரக்ஷன் யாத்திரை' செப்டம்பர் 22 அன்று தொடங்கி 27 நாட்கள் கழித்து இன்று நிறைவடைந்தது.
யாத்திரையின் இறுதி கட்டமாக மார்கோவில் ராகுல், கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தார்.