

'வாக்குத் திருட்டு' புகார்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் மறுத்துவிட்டார்.
இது தொடர்பான விவகாரங்கள் உச்ச நீதிமன்றத்தின் நீதித்துறை பிரிவில் நிலுவையில் இருப்பதால் இந்த சந்திப்பை மேற்கொள்ள இயலாது என்று அவர் கூறியதாக ஞாயிற்றுக்கிழமை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
கடிதத்தில், 'வாக்கு திருட்டு'க்கு முற்றுப்புள்ளி வைத்தல், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகல், வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளை நிறுத்துதல் மற்றும் மீண்டும் காகித வாக்குச்சீட்டு முறைக்கு மாறுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மனுவை அளிக்க திங்கள்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணிக்குள் அவரை சந்திக்க நேரம் கோரியிருந்தனர்.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சி இந்த பேரணியை "சலோ டெல்லி - ஜனநாயகத்திற்கான பேரணி" (Chalo Delhi - March for Democracy) என்று அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக தலைவர்கள் மதியம் 1.30 மணிக்கு கன்னாட் பிளேஸ் - பாரகம்பா சாலை சந்திப்பில் ஒன்றுகூடுவார்கள் என்று தெரிகிறது.
சந்திப்புக்கான ராகுல் காந்தியின் கோரிக்கைக்குப் பதிலளித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், நிர்வாக ரீதியாக இது குறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறினார்.
அதற்கு பதிலாக, நீதித்துறை பிரிவில் இது குறித்து மனு தாக்கல் செய்யுமாறு காங்கிரஸ் தலைவரிடம் அவர் கேட்டுக்கொண்டார்; அந்த மனு செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும் பட்சத்தில், அவர்களுக்காக உச்ச நீதிமன்றம் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்றும் தலைமை நீதிபதி கூறினார். மேலும், நிர்வாக ரீதியாகச் செயல்படும்போது அரசின் நிர்வாக பிரிவின் செயல்பாடுகளில் உச்ச நீதிமன்றத்தால் தலையிட முடியாது என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.