

மேற்கு வங்கத்தின் முன்னாள் துணைச் சபாநாயகரும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆசிஷ் பானர்ஜி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய ஆசிஷ் பானர்ஜி, 2001 முதல் 2026 வரை தொடர்ந்து 5 முறை ராம்பூர்ஹட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மம்தா பானர்ஜி ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சராகவும், பின்னர் மேற்கு வங்க சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
இந்நிலையில் பீர் பூம் மாவட்டம் ராம்பூர்ஹட் பகுதியிலுள்ள தனது வீட்டின் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
தாராபீத் ராம்பூர்ஹட் மேம்பாட்டு ஆணையத்தின் டெண்டர்கள், காசோலைகள் விநியோகம், திட்ட ஒப்புதல்கள், தடையில்லா சான்றிதழ்கள் வழங்குவதில் அவர் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தான் ஊழல் செய்பவன் இல்லை என அவர் தனது கைப்பட எழுதிய ஒரு பக்க தற்கொலை கடிதத்தை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.
அதில், "நான் அரசியலில் நுழைந்தது மிகப்பெரிய தவறு. எனது குடும்பத்தினர் இனி எதிர்காலத்தில் எந்தக் காலத்திலும் அரசியலுக்குள் நுழையக் கூடாது.
நான் எனது வாழ்நாளில் எந்தக் காலத்திலும் எந்த ஒரு ஊழலிலும் ஈடுபடவில்லை. எந்த ஒரு வேலைக்காகவும் யாரிடமிருந்தும் ஒரு பைசா கூட லஞ்சமாகப் பெறவில்லை.
தாராபீத் ராம்பூர்ஹட் மேம்பாட்டு ஆணையத்தின் எந்த ஒரு முடிவிலும் எனக்கு எந்தப் பங்கும் இல்லை.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் நடைபெற்ற சில தவறான காரியங்களை என்னால் மனதார ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதே நேரத்தில், அவற்றுக்கு எதிராக என்னால் துணிந்து குரல் கொடுக்கவும் முடியவில்லை.
என் மீதும் எனது நேர்மையின் மீதும் களங்கம் ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்பி என்னை அவமானப்படுத்த முயன்றுள்ளனர்.
எனது இந்த முடிவிற்கு எந்த ஒரு தனிப்பட்ட நபரும் பொறுப்பல்ல." என்று தெரிவித்துள்ளார்.