

இந்தியாவில் ஆதார் அட்டைகளின் மூலம் வழங்கப்பட்டு வரும் சமூக நலத்திட்டங்கள் இனிமேல் வாக்காளர் அடையாள அட்டை மூலம் வழங்கப்படும் என பாஜக கூட்டணி அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர மறுஆய்வு (எஸ்.ஐ.ஆர்) மூலம் போலி வாக்களர்களை கண்டறிந்து, அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி வருகிறது.
இந்த விவகாரத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வேண்டுமென்றே நீக்கப்பட்டு வருவதாக காக்ரோ ஜனதா கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கீழ் சமூக நலத்திட்டங்கள் ஆதார் அட்டை பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆதார் அட்டைகள் மூலமாக வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் இனிமேல் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய பஞ்சாயத்து ராஜ் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் அண்மையில் அறிவித்திருந்தார்.
இதையடுத்து சமூக நலத்திட்டங்கள் ஆதார் அட்டைக்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டை மூலம் வழங்கப்படுவது ‘சதி’ என்ற வர்ணித்துள்ள ராகுல் காந்தி, இந்த நடவடிக்கைகள் பொதுமக்களை சென்றடைவதை பாதிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“மோடி அரசாங்க அமைச்சர் ஒருவர் இனிமேல் நலத்திட்டங்களுக்கான தகுதி ஆதார் மூலமாக அல்லாமல், வாக்காளர் அடையாள அட்டை மூலம் தீர்மானிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இது ஒரு மிக மோசமான சதித்திட்டம், சிறப்பு தீவிர மறுஆய்வு திட்டத்தின் மூலம் (SIR) லட்சக்கணக்கான பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுகின்றன. இது தடுக்கப்படாவிட்டால், இன்னும் அதிகமான பெயர்கள் நீக்கப்படும்.
அவற்றில் பெரும்பாலான பெயர்கள் யாருடையவை? பாஜகவை விமர்சனம் செய்பவர்களின் பெயர்கள் தான். வாக்காளர் பட்டியல் ஒரு நடுநிலையான தேர்தல் ஆணையத்தின் கைகளில் இருக்க வேண்டும்.
ஆனால் இப்போது அது மோடி அரசாங்கத்தின் ஊழியரான ஞானேஷ் குமாரின் கைகளில் உள்ளது. வாக்குத்திருட்டில் பாஜகவுடனான அவரது கூட்டுச் சதியை நாங்கள் ஆதாரங்களுடன் கையும் களவுமாக பிடித்துள்ளோம்.
அவர்கள் எப்போதும் பாஜகவுக்கு பெரும்பான்மையை கொடுக்கும் ஒரு பட்டியலை உருவாக்க தயாராகி வருகின்றனர். இப்போது அதே பட்டியல்தான் ஒரு நலத்திட்டத்திலிருந்து உங்களுக்கு பணம் கிடைக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்.
நேற்று பாஜகவை அகற்ற வேண்டும் என்று கூறிய ஒவ்வொரு நபரின் பெயரும், அடுத்தடுத்து வரிசையாக நீக்கப்படும். அடுத்ததாக வாக்கு பறிக்கப்படும், வாக்கு பறிக்கப்பட்டு பின் உரிமைகள் பறிக்கப்படும்.
நீங்கள் உணர்வதற்குள், அபகரிக்கப்பட்ட ஒரு ஜனநாயகத்தின் கண்ணுக்கு தெரியாத குடிமகனாக மாறிவிடுவீர்கள், அங்கு மக்கள் அரசைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள், அரசுதான் தன் மக்களைத் தேர்ந்தெடுக்கும்.
இன்று, பஞ்சாயத்து ராஜ் திட்டங்கள், நாளை, ரேஷன் பொருட்களா? ஓய்வூதியங்களா? மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமா (MGNREGA)? வீடா? கல்வி உதவித்தொகையா? இட ஒதுக்கீடா?
இது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அரசியல் அல்ல, மாறாக தேர்தல்களை திருடுவதற்கான ஒரு ஏற்பாடு மற்றும் அதிகாரத்தில் நீடிப்பதற்கான ஒரு நிரந்தர அமைப்பு.
வாக்களிப்பது உங்கள் உரிமை, அது ஒரு நிபந்தனை அல்ல. ஒரு ஏழையின் ஓய்வூதியத்தை அவரது வாக்காளர் அட்டைக்காக பணயக் கைதியாக வைத்திருக்க முடியாது.
இது வெறும் வாக்குத் திருட்டு மட்டுமல்ல, இது உரிமைத் திருட்டு. இதை நாங்கள் நடக்க விடமாட்டோம்”.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.