2027 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸுக்கு 26 தொகுதிகள் ஒதுக்க சமாஜ்வாதி முன்மொழிவு

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கிடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டச் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.
 Uttar Pradesh Assembly
Published on: 
Summary

வருகிற 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 26 தொகுதிகளை வழங்க முன்மொழிந்துள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, டெல்லியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரியின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ராம் கோபால் யாதவ், காங்கிரஸுக்கு வழங்க உத்தேசித்துள்ள 26 தொகுதிகளின் விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். இரு கட்சிகளுக்கு இடையிலான இரண்டாம் கட்டத் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

காங்கிரஸ் ஏற்கனவே வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகள், இரண்டாம் இடத்தைப் பிடித்த நான்கு தொகுதிகள் ஆகியவற்றுடன், சமாஜ்வாதி கட்சி 60,000 முதல் 70,000 வாக்குகள் வரை பெற்றிருந்தும் காங்கிரஸ் வெறும் 2,000 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்த மற்ற 20 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 26 தொகுதிகள் வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கிடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டச் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தல் வியூகம் மற்றும் தொகுதி எண்ணிக்கை தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், அடுத்த கட்ட முடிவுகள் குறித்து இரு தரப்பிலும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

ஆளும் தரப்பின் கடும் விமர்சனம்

சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் பதிலடி கொடுத்துள்ள உத்தரப் பிரதேச அமைச்சர் தயாசங்கர் சிங், பலியாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இரு கட்சிகளும் "எதிர் துருவங்கள்" என்றும், சுயநலத்திற்காக மட்டுமே ஒன்று சேர முயல்வதாகவும் குற்றம் சாட்டினார். நாட்டிற்கோ சமூகத்திற்கோ பொதுவான இலக்கோ, கொள்கை ஒற்றுமையோ இல்லாத கூட்டணி இதுவென அவர் சாடினார்.

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் காங்கிரஸுக்கு எதிராகவே கட்சியைத் தொடங்கியதைச் சுட்டிக்காட்டிய அவர், மிசா சட்டத்தின் கீழ் முலாயம் சிங் யாதவைக் காங்கிரஸ் சிறையில் அடைத்துத் துன்புறுத்தியதாகவும், அப்போதைய சூழலை நினைவுகூர்ந்தும் அகிலேஷ் யாதவ் மீது விமர்சனம் முன்வைத்தார். தனது தந்தையின் கனவுகளையும் கொள்கைகளையும் சிதைப்பதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர், முன்மொழியப்படும் கூட்டணி குறித்து மாநில மற்றும் நாட்டு மக்களுக்கு அகிலேஷ் யாதவ் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

X