

ஓமன் நாட்டு விமானப் போக்குவரத்து அதிகாரிகளால் அவரது தவறான நடவடிக்கைகள் ஏற்கனவே கண்டறியப்பட்டு, அவர் விமானம் இயக்கும் பணிகளிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற பிளைதுபாய் விமானத்தில், அதன் கேப்டன் ஸ்மித் மச்சார் மீது துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி திடீரென தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சக பணியாளர்களாலும் விமானியாலும் அவர் உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி ஏற்கனவே கடுமையான நடத்தை கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஓமன் நாட்டு விமானப் போக்குவரத்து அதிகாரிகளால் அவரது தவறான நடவடிக்கைகள் ஏற்கனவே கண்டறியப்பட்டு, அவர் விமானம் இயக்கும் பணிகளிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இத்தகைய பின்னணி கொண்ட ஒருவரை பிளைதுபாய் நிறுவனம் மீண்டும் பணியில் அமர்த்தி, பயணிகள் விமானத்தை இயக்க அனுமதித்தது எப்படி என்று அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி.வேன்ஸ் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். அலாஸ்கா பயணத்திற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரலாற்று ரீதியாகப் பார்த்தால் அந்த நபர் ஒரு பிரச்சனையாகவே இருந்துள்ளார் என்றும், அவரைப் போன்ற ஒருவர் வணிக ரீதியிலான பயணிகள் விமானத்தை இயக்கியிருக்கவே கூடாது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்புகளின் பாதுகாப்பு நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளை இச்சம்பவம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட துணை விமானிக்கு சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா அல்லது தனிப்பட்ட முறையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டாரா என்பது குறித்துப் பல்வேறுகட்ட விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.