மாநிலங்களவை தேர்தலில் மூத்த தலைவர்களுக்கு சீட் மறுப்பு.. புது முகங்களை களமிறக்கிய பாஜக

12 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 16 அன்று நடைபெற உள்ளது.
ஹர்தீப் சிங் பூரி, ஸ்மிரிதி இரானி
ஹர்தீப் சிங் பூரி, ஸ்மிரிதி இரானி
Published on: 
Summary

உத்தரப் பிரதேசம் மாநிலங்களவை தேர்தலில் மூத்த தலைவர்களுக்கு பாஜக சீட் மறுத்துள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 16 அன்று நடைபெற்று அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை பதவிக்காலம் முடிவடையவுள்ள பாஜக தலைவர்களில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, அருண் சிங், கீதா ஷக்யா, நீரஜ் சேகர், பிரிஜ் லால், பி.எல். வர்மா மற்றும் சீமா திவேதி ஆகியோர் அடங்குவர்.

சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் ராம்ஜி கௌதம் ஆகியோரின் பதவிக்காலமும் முடிவடைகிறது.

மேலும் உத்தரப் பிரதேச முன்னாள் துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். எனவே செப்டம்பர் முதல் அவர் தொகுதியும் காலியாக உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் காலியாக இருக்கும் 8 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பாளர் தேர்வுக்காக, ஸ்மிருதி இரானி மற்றும் ஹரிஷ் திவேதி உள்ளிட்ட பாஜக தேசிய பொதுச் செயலாளர்களின் பெயர்கள் கடந்த சில நாட்களாக விவாதத்தில் இருந்தன.

மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பி.எல். வர்மா, முன்னாள் எம்.பி.க்கள் கௌஷல் கிஷோர் மற்றும் சஞ்சீவ் பால்யன் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன.

இறுதிப் பட்டியல்

இருப்பினும், பாஜக நேற்று அறிவித்த இறுதிப் பட்டியலில் இவர்கள் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை. பாஜக புதிய முகங்களைக் களமிறக்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளராக தரம் பால் சிங், ராதாகாந்த் ஓஜா, பிரகாஷ் பால், வித்யாசாகர் சோங்கர், கோபி கிருஷ்ண பாண்டே, பிரியங்கா சிங் ராவத், ராம் பிரதாப் சிங் சவுகான் மற்றும் ஸ்ருதி கங்வார் ஆகியோரை பாஜக அறிவித்துள்ளது.

இதில் குறிப்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சராக இருக்கும் ஹர்தீப் சிங் பூரி மற்றும் சமீபத்தில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஸ்மிருதி இரானி ஆகியோருக்கு சீட் வழங்கப்படாதது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய மாநிலங்களவை பலத்தின்படி, பாஜக 116 உறுப்பினர்களைக் கொண்டு மேலவையில் மிகப்பெரிய கட்சியாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com