

துபாயில் இருந்து இஸ்ரேலிற்கு சென்ற பயணிகள் விமானத்தை இயக்கிய இந்திய விமானியான கேப்டன் ஸ்மித் மச்சாரை, ஓமனை சேர்ந்த துணை விமானி கத்தியால் குத்திய போது தான் அனுமன் மந்திரத்தை சொல்லிக் கொண்டு இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடியிடம் விமானி கூறினார்.
ப்ளைதுபாய் என்ற பயணிகள் விமானம் புதன்கிழமை துபாயில் இருந்து 180 பயணிகளுடன் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்விற்கு சென்றது. இந்த விமானத்தில் பெரும்பாலான பயணிகள் இஸ்ரேல் குடிமக்களாக இருந்தனர்.
விமானம் கிளம்பிய சில மணி நேரத்தில், விமானத்தை கடத்தும் நோக்கில் ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி செயல்பட்டபோது, அதை தடுத்த இந்திய விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார் கத்தியால் தாக்கப்பட்டார்.
இதையடுத்து படுகாயமடைந்த விமானி, மன உறுதியுடன் செயல்பட்டு விமானத்தை சவுதியில் உள்ள தபுக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார்.
இதைத்தொடர்ந்து விமானிக்கு முதலில் சவுதியில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிக்கிசை பெற்று வரும் விமானியுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கால் மூலம் பேசினார்.
இந்திய விமானி பிரதமர் மோடியிடம் பேசிய போது, தாங்கள் தான் எனக்கு மிகப்பெரிய முன்மாதிரி என்றும், தாங்கள் என்னை அழைத்தது தன்னை ஊக்குவிப்பதாகவும் ஸ்மித் கூறினார்.
மேலும் ஓமன் விமானியால் தான் பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருந்ததாகவும், ஆனால் நான் எழுந்து செயல்பட வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் என்றும் கூறினார்.
சக விமானி தன்னை கத்தியால் குத்திய போது, தான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாகவும், தான் எழுந்திருக்கவில்லை என்றால் இறந்துவிடுவேன் என்பதை உணர்ந்ததாகவும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய விமானி, “நான் 17 ஆண்டுகளுக்கும் மேலாக விமானம் ஓட்டி வருகிறேன், கடந்த 11 ஆண்டுகளாக விமானத்தின் கேப்டனாக இருந்து வருகிறேன்.
அதனால், என் கண்களை மூடிக்கொண்டு கூட விமானத்தில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அந்த கடைசி நிமிடத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று எனக்குத் தெரியும்.
நாங்கள் இருந்த விமானியின் அறைக் கதவை திறக்க வேண்டும் என்று என்னிடம் நானே சொல்லிக்கொண்டேன், நான் அதைத் திறந்தவுடன், மற்ற அனைவரும் உள்ளே வந்தனர். நடந்த நிகழ்வில் அனைவரின் பங்கும் சமமாக இருந்தது” என்று அவர் கூறினார்.
மேலும் தனக்கு சிரமம் ஏற்படும் போதெல்லாம் அனுமன் மந்திரத்தை சொல்லுவேன் என்றும், விமான கடத்தலில் நடந்த தாக்குதலின் போதும் அதை சொல்லிக் கொண்டிருந்ததாக கூறினார்.
இதையடுத்து விமானியிடம் பிரதமர் மோடி பேசியதாவது, “உங்களுடைய தாயார் கீதாவிடம் பேசினேன். அவர் பகவத் கீதையின் போதனைகளை கொண்டு தங்களை வளர்த்ததாக கூறினார்.
இந்தியர்கள் உயிர்களை பறிப்பவர்கள் அல்ல; மாறாக மற்றவர்களை காப்பாற்ற தங்கள் உயிரை பணயம் வைக்க தயாராக இருப்பவர்கள்.
தங்களை வரவேற்பதற்கு நாடு ஆவலுடன் காத்திருக்கிறது, நீங்கள் குணமடைய இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது.
தங்களுக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும் என்னை அழைத்து பேசுங்கள். நான் ஒரு தொலைபேசி அழைப்பு தூரத்தில் தான் இருக்கிறேன்” என்று கூறினார்.
மேலும் கேப்டன் மச்சாரின் துணிச்சலை பாராட்டிய மோடி, அகிம்சை என்பதன் பொருளை நீங்கள் உலகிற்கு காட்டியுள்ளதாகவும், விமானத்தில் இருந்த அனைவரையும் காப்பாற்றி ஒரு பெரிய சேவையையும் செய்துள்ளதாகவும் மோடி பாராட்டினார்.