தமிழ்நாட்டின் பெருமையை நாகரீகமற்றது எனக்கூறி மத்திய அமைச்சர் புண்படுத்துகிறார்- கனிமொழி

தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தர்மேந்திரா பிரதான தெரிவித்தார்மத்திய அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும்" என்று எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் பெருமையை நாகரீகமற்றது எனக்கூறி மத்திய அமைச்சர் புண்படுத்துகிறார்- கனிமொழி
Published on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.

தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்.

இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து, தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பி. கனிமொழியிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.பி. கனிமொழி, "தமிழ்நாடு அரசையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் பொய்யர்கள் என்கிறார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்; நாகரீகமற்றவர்கள் எனக்கூறி எங்கள் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தலைவருடன் ஆலோசித்துவிட்டு மத்திய அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்வோம். திமுக-வில் என்ன அரசியல் நடக்கிறது என்பது பற்றி கவலைப்பட ஒன்றிய அமைச்சர் யார்? பிரச்னையை திசை திருப்பும் செயல் இது

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஆதரித்ததாக, திசை திருப்பும் விதமாக தர்மேந்திர பிரதான் பேசி வருகிறார். தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. இதனை முதலமைச்சர் பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டு எம்.பிக்களும் இவற்றுக்கு எதிராக இதே அவையில் கருத்தை பதிவு செய்து இருக்கிறோம், ஒன்றிய அமைச்சரை சந்தித்தும் விளக்கமளித்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com