

திருப்பதி லட்டு தயாரிப்புக்கு கலப்பட நெய் வினியோகித்த நிறுவனங்கள் ஹவாலா மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி இருப்பதாகவும். இந்த நிறுவனங்களின் ரூ.130 கோடி சொத்துகளை முடக்கி இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு கலப்பட நெய் வினியோகித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் புயலை கிளப்பியது. இது தொடர்பாக ஆந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு மற்றும் குற்றப்பத்திரிகை அடிப்படையில் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக மேற்படி நெய் வினியோகம் செய்த நிறுவனங்களில் அதிரடி சோதனையும் நடந்தது.
இந்த வழக்கில் போல பாபா ஆர்கானிக் நிறுவனம், ஸ்ரீ வைஷ்ணவி பண்ணை நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர்களான விபின் ஜெயின் மற்றும் போமில் ஜெயின் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.
மேலும் சுகிருதி புட்ஸ், அதன் நிறுவனர் கைலாஷ் சந்த மங்களா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களும் விசாரணையில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதன்படி போலே பாபா நிறுவனம் ரூ.234.5 கோடி மதிப்பிலான கலப்பட நெய் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதற்காக மிகப்பெரிய அளவில் கமிஷனும் வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
போலே பாபா மற்றும் சுகிருதி புட்ஸ் நிறுவனங்களின் தொழிற்சாலைகளில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், பாம் கெர்னல் ஆயில் மற்றும் பாமோலீன் ஆகியவற்றை பல்வேறு ரசாயனங்களுடன் கலந்து நெய் தயாரிக்கப்பட்டு, பின்னர் அது சமையல் எண்ணெய்கள் என விலைப்பட்டியல் இடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த பரிவர்த்தனைகளில் கணக்குகளை சரி செய்வதற்காக, ஒரு உண்மையான பால் பண்ணையைக் காட்டும் பொருட்டு, பால் மற்றும் நெய்யின் போலியான கொள்முதல்களும், கொழுப்பு நீக்கப்பட்ட பால் போன்ற துணைப் பொருட்களின் போலியான விற்பனைகளும் பதிவு செய்யப்பட்டு இருந்தன.
போலியான கொள்முதல்கள் எனக் கூறப்பட்டவற்றுக்காக வங்கிகள் மூலம் செலுத்தப்பட்ட பணம், ஹவாலா வழிகள் மூலம் ரொக்கமாகத் திருப்பி அனுப்பப்பட்டது.
பின்னர் அந்தப்பணம் போலி பால் பண்ணைகளுக்கு கமிஷன் வழங்கவும், இந்த மோசடியுடன் தொடர்புடையவர்கள் எனக்கூறப்படும் பிற நபர்களுக்குப் பணம் செலுத்தவும் பயன்படுத்தப்பட்டது.
இந்த தகவல்களை வெளியிட்டுள்ள அமலாக்கத்துறை, இந்த விவகாரத்தில் மேற்படி நிறுவனங்களின் ரூ.129.85 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி இருப்பதாகவும் கூறியுள்ளது. திருப்பதி லட்டு தயாரிப்புக்காக கலப்பட நெய் வழக்கப்பட்ட விவகாரத்தில் ஹவாலா மோசடி நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.