3 கோடி மதிப்பிலான நகைகளை திருடி 5 அடி ஆழத்தில் புதைத்த கொள்ளையர்கள் கைது!

காவல் துறையின் தீவிர தேடுதலுக்கு பிறகு 5 அடி ஆழத்தில் புதைத்து வைத்த நகைகள் மீட்பு.
delhi
Published on

கொள்ளை சம்பவம்

டெல்லி மால் ரோடு பகுதியில் உள்ள ரிவியரா அடுக்குமாடி குடியிருப்பில் உரிமையாளர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருந்த நிலையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அதிர்ச்சி

வீட்டின் உரிமையாளர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு வீட்டிற்கு சென்றபோது வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததையும், பீரோக்கள் திறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ.4.3 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

காவல் விசாரணை

இந்த கொள்ளை சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வடக்கு மாவட்ட குற்றப்பிரிவு குழுவினர் வீட்டை ஆய்வு செய்தனர்.

வீட்டில் புதிதாக பணியில் சேர்ந்திருந்த 2 வீட்டு வேலைக்காரர்களும் காணாமல் போயிருந்ததுடன், அவர்களின் செல்போன்களும் துண்டிக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

கைது

வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள், சுமார் 5 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொள்ளை தொடர்பாக வீட்டு வேலைக்காரர் உள்பட 3 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.

கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் 2 பைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. அவர்கள் ஆட்டோ மூலம் ஐ.எஸ்.பி.டி. சென்று, அங்கிருந்து வேறு வாகனத்தில் நியூடெல்லி ரெயில் நிலையத்துக்கு சென்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்காணிப்பு மூலம் பீகார் மாநிலம் சுபால் பகுதியைச் சேர்ந்த அனில் காமத் (22), ஜார்க்கண்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

நகைகள் மீட்பு

இதனிடையே சந்தேக நபரான அனில் காமத்தின் மாமனார் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் மற்றொரு அறையின் தரைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான இடம் இருப்பதை போலீசார் கண்டனர். அந்த இடத்தில் சுமார் 5 அடி ஆழம் தோண்டியபோது, பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன.

ஓட்டல் தொடங்க திட்டம்

இந்த கொள்ளையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அனில் காமத், கொள்ளையடித்த பணத்தை பயன்படுத்தி நேபாளத்துக்கு தப்பிச் சென்று அங்கு ஓட்டல் அல்லது கஃபே தொடங்க திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அனில் காமத் செப்டம்பர் 16-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரது மாமனார் தேவ் சந்திர சா (49) என்பவரும் கொள்ளை பொருட்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com