

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அய்யப்பன் காலனியைச் சேர்ந்தவர் அரவிந்த் ராம். தொழிலதிபரான இவர் அதே பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் அச்சககங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் விற்பனை நிறுவனம் மற்றும் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று இரவு இவரது குடும்பத்தினருடன் வெளியே சென்றுள்ளார். உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டு நீண்ட நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. மேலும் வீட்டின் கதவும் திறந்து கிடந்ததை பார்த்து அரவிந்த் ராம் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
வெளியில் செல்லும் போது பூட்டிவிட்டு சென்ற வீட்டிற்குள் கதவை திறந்து தங்களுக்கு தெரியாமல் யார் சென்றது என்ற குழப்பத்துடன் அவர்கள் உள்ளே நுழைய முயன்றனர். அந்த சமயத்தில் உரிமையாளர் வருவதை அறிந்து சுதாரித்துக் கொண்ட வீட்டிற்குள் புகுந்திருந்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் வெளியில் ஓடிவந்தனர்.
மேலும் அவர்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் உயிர் பயத்தில் அரவிந்த் ராம் மற்றும் அவருடன் இருந்தவர்கள் அச்சத்தில் உறைந்து நின்றார்கள். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் தாங்கள் வந்த காரில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் ராம் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. மேலும் தனி அறையில் பீரோ லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த 93 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் திருடுபோய் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக சிவகாசி நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் துணையுடன் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக கொண்டு 93 பவுன் நகைகளுடன் தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சிவகாசியில் நள்ளிரவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறும் போது, இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத் துள்ளனர்.