

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இன்று 138-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார்.
அவர் கூறியதாவது:-
வருகிற அக்டோபர் 2-ந்தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளாகும். அவர் நமக்கு வாழ்விற்கான பல மந்திரங்களை வழங்கி உள்ளார். அவற்றில் தூய்மையும் ஒன்று. தூய்மை என்பது நாம் மகாத்மா காந்திக்கு செலுத்தக்கூடிய மிகச் சிறந்த அஞ்சலியாகவும் அமைகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 28, 29 தேதிகளில், பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதலை (சர்ஜிக்கல்) நடத்தியது. இந்த துல்லிய தாக்குதல் 10 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.
நமது வீரர்களின் துணிச்சலை உலகமே வியந்து பார்த்தது. இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கைக்கான ஒரு எடுத்துக்காட்டாக இது அமைந்தது.
இந்தத் துல்லியத் தாக்குதல் மூலம் உலகிற்கே பறைசாற்றியப்பட்டது. இது பயங்கரவாதத் தாக்குதல்களால் இந்தியா நீண்ட காலமாக அனுபவித்து வந்த இன்னல்களுக்கு ஒரு உறுதியான பதிலடியாக அமைந்தது.
பயங்கரவாதிகள் இந்தியாவின் மீது விரோதப் பார்வையுடன் நோக்க துணிந்தால், அவர்கள் தகுந்த பதிலடியை சந்திக்க நேரிடும்.
இன்றைய இந்தியா பயங்கர வாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒரு தேசியப் பொறுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கு உண்டு. மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் இணையவழிப் பதிவு வசதியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் ஏறக்குறைய நிறை வடைந்துவிட்டது.
32 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் குறித்த தகவல்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் இல்லாத இளைஞர் இயக்கம் மூலம், இளைஞர்கள் ஆக்கப்பூர்வமான பிரச்சாரங்கள், செயல்பாடுகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழியை ஏற்றுள்ளனர்.
இவ்வாறு மோடி பேசினார்.