சூரத் ஜவுளி சந்தையில் தீவிபத்து: ரூ.24 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல்- முன்னாள் கணக்காளர் கைது

கணக்காளருக்கு வழங்கப்பட வேண்டிய 10,000 ரூபாய் சம்பள பாக்கியை உரிமையாளர் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
Surat textile Fire
Published on
Summary

தன் முதலாளிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று திட்டமிட்ட வினோத் சாவ்லே, கடந்த 8-ஆம் தேதி எரிபொருள் நிலையத்திற்கு சென்று நெகிழிப் பையில் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தின் சரோலி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஷியாம் சங்கினி ஜவுளிச் சந்தையில், கடந்த 9-ஆம் தேதி அதிகாலை நேரத்தில் கடுமையான தீவிபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் சுமார் 24 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் பிற பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகள் மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில், இந்த தீவிபத்து விபத்தினால் ஏற்படவில்லை. வேண்டுமென்றே வைக்கப்பட்ட சதிச்செயல் என்பதை கண்டறிந்து, சம்பவத்தில் தொடர்புடைய முன்னாள் கணக்காளரை கைது செய்துள்ளனர்.

10,000 ரூபாய் சம்பள பாக்கி

மகாராஷ்டிர மாநிலம் துளையைச் சேர்ந்த வினோத் சாவ்லே (33) என்பவர், சூரத் ஜவுளிச் சந்தையில் தொழிலதிபர் அனுமன் பிரசாத் ஜாவர் என்பவரின் கடையில் கடந்த 2026 ஏப்ரல் மாதம் முதல் கணக்காளராகப் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு மாதம் 30,000 ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருந்தது. இந்நிலையில், கடையில் வேலை பார்த்து வந்த மற்றொரு கணக்காளரும் உரிமையாளரும் தனது பணித்திறனை குறை கூறி அடிக்கடி அவமானப்படுத்தியதாக வினோத் சாவ்லே குற்றம் சாட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் பணியில் இருந்து விலகியுள்ளார். அவ்வாறு விலகியபோது அவருக்கு வழங்கப்பட வேண்டிய 10,000 ரூபாய் சம்பள பாக்கியை உரிமையாளர் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.

தன் முதலாளிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று திட்டமிட்ட வினோத் சாவ்லே, கடந்த 8-ஆம் தேதி எரிபொருள் நிலையத்திற்கு சென்று நெகிழிப் பையில் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். பின்னர், நள்ளிரவில் தனது முன்னாள் முதலாளியின் கடைக்கு வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிப் பொதிகள் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார்.

கடைக்கு வெளியே பற்றி எரிந்த தீ, நொடிப் பொழுதில் அடுத்தடுத்து இருந்த கடைகளுக்கும் கடகடவெனப் பரவியது. இதில் மொத்தம் நான்கு ஜவுளி வியாபாரிகளுக்கு சொந்தமான 14 கடைகளில் இருந்த பொருட்கள் தீக்கிரையாகின. அனுமன் பிரசாத் ஜாவருக்கு ரூ.6 கோடியும், பிற வியாபாரிகளான அபிஷேக் சோனிக்கு ரூ.2 கோடியும், அனுராக் ஜாலனுக்கு ரூ.12 கோடியும், ஹரிபிரசாத் ஜாவருக்கு ரூ.4 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்திற்குப் பிறகு, தான் செய்த குற்றத்தின் வீரியத்தையும், காவல்துறையினர் தன்னைத் தேடி வருவதையும் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகள் வாயிலாக அறிந்த வினோத் சாவ்லே, தனது கைபேசியை அணைத்துவிட்டு சூரத்தை விட்டுத் தப்பியோடினார். அவரிடம் இருந்த 13,000 ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொண்டு ராஜஸ்தானில் உள்ள காதுஷ்யாம் கோவில் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று தலைமறைவாக இருந்துள்ளார்.

சுமார் 12 நாட்கள் கழித்து, அவரிடமிருந்த பணம் தீர்ந்த நிலையிலும், போலீசார் தன் மீதான தேடுதலைக் கைவிட்டிருப்பார்கள் என்ற தவறான எண்ணத்திலும் அவர் மீண்டும் சூரத்திற்குத் திரும்பியுள்ளார். அப்போது, கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சூரத் குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com