கிரேசி மேன்ஷனில் டொனால்ட் டிரம்ப்- ஜோஹ்ரான் மம்தானி சந்திப்பு: அரசியல் வேறுபாடுகளை கடந்து மலர்ந்த நட்பு

மம்தானி ஒரு சிறந்த மேயராக உருவாக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் திறமைகளை கொண்டுள்ளார் என டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
Donald Trump - Zohran Mamdani
Published on
Summary

குவீன்ஸ் பகுதியில் சுமார் 12,000 புதிய மலிவு விலை வீடுகளைக் கட்டும் $21 பில்லியன் கூட்டாட்சி நிதித் திட்டம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

நியூயார்க் நகர மேயரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிரேசி மேன்ஷனில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி இடையே ஒரு முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜனநாயக சோசலிசக் கொள்கையைக் கொண்ட மம்தானியை, குடியரசுத் தலைவரான டிரம்ப் பல மாதங்களாகக் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், இந்த திடீர் சந்திப்பு சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

சிறந்த மேயராக வருவார்

சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், "மம்தானி ஒரு சிறந்த மேயராக உருவாக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் திறமைகளை கொண்டுள்ளார். நியூயார்க் நகரத்திற்கும் இந்த நாட்டிற்கும் நன்மையான விஷயங்கள் நடக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். மம்தானி தனது ஆட்சி காலத்தை சிறப்பாக தொடங்கியுள்ளார்" எனப் பாராட்டினார்.

முன்னதாக மம்தானியை தீவிர இடதுசாரி கொள்கையுடையவர் என்று டிரம்ப் விமர்சித்து வந்த நிலையில், தற்போதைய நட்பு பேச்சுவார்த்தை இருவருக்கும் இடையே உருவாகியுள்ள சுமுகமான உறவை வெளிப்படுத்தியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் மூடிய கதவுகளுக்கு பின் நடந்த இந்த சந்திப்பில், நியூயார்க் நகரின் முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குவீன்ஸ் பகுதியில் சுமார் 12,000 புதிய மலிவு விலை வீடுகளைக் கட்டும் $21 பில்லியன் கூட்டாட்சி நிதித் திட்டம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். ஹெய்ட்டி நாட்டினருக்கான தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை திரும்பப் பெறும் டிரம்பின் முடிவுக்கு எதிராக மம்தானி தனது கடுமையான கருத்துகளை பதிவு செய்தார். குடியேறிகள் நியூயார்க்கின் பொருளாதாரத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர் டிரம்பிடம் வலியுறுத்தினார்.

மம்தானியின் நிலைப்பாடு

டிரம்ப் நிர்வாகம் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்குக் சில முக்கிய ஊடகங்களுக்குத் தடை விதித்திருந்தது. இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இங்கு அனுமதி உண்டு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என மம்தானி டிரம்பின் முன்னிலையிலேயே தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்துள்ள டிரம்ப், இந்த சந்திப்பின் மூலம் நியூயார்க் நகர மேயருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதை காட்டியுள்ளார். அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், நியூயார்க் மக்களுக்குத் தேவையான நன்மைகளை செய்ய யாருடனும் இணைந்து பேசத் தயார் என மம்தானியும் உறுதிபட கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com