அமெரிக்க ஊடகங்கள் போராட்டம்: டிரம்ப் நிர்வாகத்திற்கும் செய்தி நிறுவனங்களுக்கும் இடையே தீவிரமடையும் மோதல்!

வெள்ளை மாளிகை நிர்வாகம் சி.என்.என், எம்.எஸ் நௌ மற்றும் பாலிடிகோ ஆகிய ஊடகங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
Trump
Published on
Summary

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் செல்லும் அதிபரின் பயணத்தை நேரடியாக ஒளிபரப்ப மாற்று ஏற்பாடுகளை செய்யவும் இந்த ஊடகங்கள் மறுத்துவிட்டன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கும் அந்நாட்டின் முன்னணி செய்தி ஊடகங்களுக்கும் இடையிலான சர்ச்சை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பிரபல செய்தி நிறுவனமான சி.என்.என் செய்தி சேகரிக்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, அமெரிக்காவின் பிரதான தொலைக்காட்சி நிறுவனங்கள் அதிபரின் நிகழ்வுகளை நேரலை செய்யும் கூட்டு ஒளிபரப்பை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

வெள்ளை மாளிகை நிர்வாகம் சி.என்.என், எம்.எஸ் நௌ மற்றும் பாலிடிகோ ஆகிய ஊடகங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த நிறுவனங்கள் தனக்கு எதிராக தவறான மற்றும் எதிர்மறையான செய்திகளை பரப்புவதாக குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், அவற்றை "போலிச் செய்திகள்" என குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் இந்த மூன்று ஊடகங்களை சேர்ந்த நிருபர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதைத் தடுத்ததோடு, அவர்களின் செய்தியாளர் அடையாள அட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

அமெரிக்க ஊடகங்களின் கூட்டு புறக்கணிப்பு

வெள்ளை மாளிகையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஃபாக்ஸ் நியூஸ், ஏ.பி.சி, சி.பி.எஸ், என்.பி.சி மற்றும் சி.என்.என் ஆகிய நிறுவனங்கள் அடங்கிய 'தொலைக்காட்சி பூல் கூட்டமைப்பு' அதிபர் டிரம்ப்பின் நிகழ்வுகளைச் பகிர்ந்து ஒளிபரப்புவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

கூட்டமைப்பின் தற்போதைய தலைவரும் ஃபாக்ஸ் நியூஸின் வாஷிங்டன் பிரிவு அதிகாரியுமான பிரையன் பாட்டன், குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட பிரத்யேக அனுமதி தேவைப்படும் அதிபரின் நிகழ்வுகளை இனி கூட்டமைப்பு ஒளிபரப்பாது என அறிவித்துள்ளார். மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் செல்லும் அதிபரின் பயணத்தை நேரடியாக ஒளிபரப்ப மாற்று ஏற்பாடுகளை செய்யவும் இந்த ஊடகங்கள் மறுத்துவிட்டன.

நீதிமன்றத்தில் வழக்கு

தங்கள் மீதான தடையை எதிர்த்து சி.என்.என், எம்.எஸ் நௌ மற்றும் பாலிடிகோ ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. அரசின் இந்த நடவடிக்கை அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தம் வழங்கும் பத்திரிகை சுதந்திர உரிமையை மீறுவதாகவும், கருத்து சுதந்திரத்திற்கு எதிரான பாகுபாடு என்றும் செய்தி நிறுவனங்கள் குற்றம்சாட்டியுள்ளன. செய்தியாளர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை அரசாங்கத்திற்கு இல்லை என்றும், பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பதே தங்கள் வழக்கின் முதன்மை நோக்கம் என்றும் செய்தி நிறுவனங்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

டிரம்ப் நிர்வாகத்தின் விளக்கம்

ஊடகங்களின் எதிர்ப்பிற்கு பதிலளித்துள்ள அதிபர் டிரம்ப், தமது அரசாங்கம் பத்திரிகை சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தவில்லை எனக் கூறியுள்ளார். ஊடக சுதந்திரத்தை தாம் மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மக்களின் இல்லமான வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து தொடர்ந்து தவறான செய்திகளைப் பரப்புவோரை அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தமது சமூக வலைதளப் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com