ரூ.2000-த்திற்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் கட்டணத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

அக்டோபர் 15 முதல் ரூ.2000த்திற்கும் அதிகமாக மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும்.
ரூ.2000-த்திற்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் கட்டணத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
Published on: 

ரூ.2000த்திற்கு மேல் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய நடைமுறைக்கு இடைக்கால தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மாறாக இந்த விவகாரம் தொடர்பாக, 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் என்சிபிஐ ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, “இது சட்டரீதியான பிரச்சினையை விட தொழில்நுட்பரீதியான பிரச்சினையே ஆகும்” எனக் குறிப்பிட்டு, புதிய கட்டண நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்தது.

மத்திய அரசின் விளக்கம்

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என். வெங்கடராமன், 96% யுபிஐ பரிவர்த்தனைகள் இந்த புதிய கட்டண வரம்பிற்குள் வராது என்றும், இந்தத் தொகை அரசுக்குச் செல்லும் வருவாய் அல்ல, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக வங்கிகள் மற்றும் பணம் செலுத்தும் சேவை நிறுவனங்களுக்கு இடையே பகிரப்படும் கட்டணம் என்றும் விளக்கம் அளித்தார்.

புதிய விதிமுறை என்ன?

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக முழுமையாக இலவசமாக இருந்து வந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு இந்த மாத தொடக்கத்தில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி, அக்டோபர் 15 முதல் ரூ.2000த்திற்கும் அதிகமாக மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மக்கள் மத்தியில் பெரும் கவலைகள் எழு, இது தனிநபர்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது என்றும், வியாபாரிகளிடம் இருந்தே வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் 96% யுபிஐ பரிவர்த்தனைகள் ரூ.2 ஆயிரத்திற்கும் உள்ளேயே நடைபெறுகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கட்டண வரம்பு :

ஆனால் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படும். அதே சமயம், பரிவர்த்தனை ரூ.75,000 அல்லது அதற்கு மேல் இருந்தாலும், அதிகபட்சக் கட்டணம் ரூ.300-க்குள் மட்டுமே இருக்கும்படி வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் துறைகளுக்குச் சலுகை

ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் போன்ற துறைகளில் நடைபெறும் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மாற்றமில்லாமல் ஒரே கட்டணமாக ரூ.5 மட்டுமே வசூலிக்கப்படும்

சிறு வணிகர்களுக்கு விலக்கு

மாதம் ரூ.1 லட்சம் வரை யுபிஐ கியூஆர் கோடு மூலம் பணம் பெறும் சிறு வணிகர்களுக்கு இந்த கட்டண முறையிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை பரிவர்த்தனைகள்

பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்டுகள்) மற்றும் பங்குச்சந்தை சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.02% கட்டணம் விதிக்கப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com