

ரூ.2,000த்திற்கு மேல் யுபிஐ பணப்பரிவர்த்தனை மேற்கொண்டால் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கட்டணம் தொடர்பான குழப்பத்திற்கு தேசிய கொடுப்பனவுக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, தனிநபர்கள் ஒருவருக்கொருவர் பணம் அனுப்பும் சாதாரண யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் கிடையாது; ஜிஎஸ்டியும் கிடையாது என்றும், இந்த புதிய விதியால் பொதுமக்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் நடக்கும் மொத்த யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளில் 96% பரிவர்த்தனைகள் ரூ.2,000-க்கு உட்பட்டவைதான். அதனால் ரூ.2,000 வரையிலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் கிடையாது.
அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, குறிப்பிட்ட பெரிய வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இது பொருந்தும். ரூ.2,000க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த MDR கட்டணத்தின் மீது 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும். மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை யுபிஐ மூலம் வரவு பெறும் சிறு வணிகர்களுக்கு இந்த MDR கட்டண வரம்பு பொருந்தாது. எனவே அவர்கள் ஜிஎஸ்டி பற்றி கவலைப்படத் தேவையில்லை.
வணிகர் தள்ளுபடி வீதம் என்பதே எம்டிஆர் கட்டணம் எனக் கூறப்படுகிறது.
அதாவது ஒரு கடைக்காரர் அல்லது வணிகர் வாடிக்கையாளர்களிடம் இருந்து டிஜிட்டல் முறையில் பணத்தைப் பெறுவதற்காக, அந்தப் பரிவர்த்தனையைச் சாத்தியமாக்கும் வங்கிகள் மற்றும் பேமெண்ட் நெட்வொர்க் ஆகியவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவர். அதற்கு வசூலிக்கப்படும் கட்டணமே எம்டிஆர் கட்டணம்.