

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. எனினும், கடந்த 2022-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறாமல் இருந்தது.
இந்தநிலையில், 31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு இன்று (புதன்கிழமை) சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதியில் தொடங்குகிறது.
இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்குகிறார். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், கேரளம் முதலமைச்சர் திரி சதீசன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
தென் மாநில முதலமைச்சர்களுடன், அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.
மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வள பகிர்வு, கல்வி, சுகாதாரம், தக வல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார்.
அதன்டி இன்று மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக சென்னை புறப்படும் மத்திய அமைச்சர் அமித் ஷா இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வரவேற்கிறார்கள். பின்னர் அவர், கார் மூலம் சாலை மார்க்கமாக கோவளம் செல்கிறார்.