

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி. இத்தாலியில் பிறந்து இந்தியாவின் மருமகளாக மாறி, நாட்டின் மிக உயரிய அரசியல் அதிகார மையமாக திகழ்ந்த இவரது வாழ்க்கை பயணம் பலரையும் வியக்க வைத்துள்ளது. இத்தாலியின் வெனிட்டோ பிராந்தியத்தில் உள்ள லூசியானா நகரில் இவர் தனது சிறுவயது காலத்தை கழித்த பூர்வீக வீடு அமைந்துள்ளது.
சாம்பல் நிற கற்கள் மற்றும் கான்கிரீட்டால் கட்டப்பட்ட அந்த அழகிய கட்டிடத்தின் மேல் தற்போது இந்தியாவின் மூவர்ண தேசியக்கொடி கம்பீரமாக பறந்து கொண்டிருக்கிறது. அப்பகுதி மக்களால் இந்தியா ஹவுஸ் என அழைக்கப்படும் 6 அறைகள் கொண்ட இந்த இல்லம், சோனியா காந்தியை கவுரவிக்கும் விதமாக அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க இல்லத்தை பிரெசியா நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுக்தேவ் சிங் காங் கடந்த 2020-ம் ஆண்டு தனது மனைவி மற்றும் மகள் பெயரில் விலைக்கு வாங்கினார். லூசியானாவில் இருந்து சுமார் 1 மணி நேர பயண தொலைவில் வசிக்கும் இவர், இந்த வீட்டை வாங்கிய நாள் முதல் அதன் பழமை மாறாமல் அப்படியே பாதுகாத்து வருகிறார். வீட்டின் உள்ளே இருந்த பொருட்கள் மற்றும் அமைப்புகளில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யாமல், மைனோ குடும்பத்தினர் விட்டுச்சென்ற நிலையிலேயே பராமரித்து வருகிறார்.
சமீபத்தில் சோனியா காந்தியின் வாழ்க்கை பயணத்தை விவரிக்கும் ஆவணப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு இதுவே சரியான தருணம் என சுக்தேவ் சிங் காங் கருதுகிறார். இதற்கான சட்டப்பூர்வ அனுமதிகளையும் அவர் ஏற்கனவே பெற்றுவிட்டார்.
இந்த சொத்தை பராமரிப்பதற்காக மாதந்தோறும் 100 யூரோவும், சொத்து வரியாக ஆண்டுக்கு சுமார் 1,000 யூரோவும் இவர் செலவிட்டு வருகிறார். இந்த வீட்டை மாதத்திற்கு 800 யூரோவுக்கு மேல் வாடகைக்கு விடலாம் எனவும், அல்லது சீக்கியர்களின் வழிபாட்டு தலமான குருத்வாராவாக மாற்றலாம் எனவும் பலர் இவருக்கு ஆலோசனை வழங்கினர். ஆனால் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலோ அல்லது அதன் அடையாளத்தை மாற்றும் விதமாகவோ செயல்பட விரும்பாத சுக்தேவ் சிங் காங் குடும்பத்தினர் அந்த ஆலோசனைகளை திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.
சோனியா காந்தியின் குடும்பத்துடன் தொடர்புடைய ஒரு பொக்கிஷமாக மட்டுமே இதனை பாதுகாக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
அமிர்தசரஸ் வந்திருந்த சுக்தேவ் சிங் காங், இந்த அருங்காட்சியக திட்டம் குறித்து விரிவாக பகிர்ந்து கொண்டார். அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த வேண்டிய சோனியா காந்தியின் தனிப்பட்ட உடைமைகள் மற்றும் அரிய புகைப்படங்களை சேகரிப்பது தொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இத்தாலிக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் முக்கிய கவன ஈர்ப்பு மையமாக மாறியுள்ள இந்த இல்லத்தில், ஒவ்வொரு ஆண்டும் சோனியா காந்தியின் பிறந்தநாளன்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. விரைவில் முழுமையான அருங்காட்சியகமாக உருவெடுக்க உள்ள இந்த இல்லம், சோனியா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்ப பின்னணியை உலகிற்கு எடுத்துக்காட்டும் அடையாளமாக திகழ உள்ளது.