

இந்தியாவில் தேசிய அளவில் நடந்த இணையவழி பணமோசடி புகாரில், ரூ. 30,000 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்ததாக இரண்டு நபர்களை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
கோவாவை சேர்ந்த பெண் ஒருவர் இணையவழி மோசடி நபர்களால் ஏமாற்றப்பட்டு, மே முதல் ஜூன் 2025 வரையிலான காலகட்டத்தில் ரூ.2.60 இழந்ததாக கூறிய புகாரை தொடர்ந்து, ஃபஹீம் மொய்ன் ஹூசைன் சையத் மற்றும் நயீம் முயீன் சையத் ஆகியோர்களை மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தேசிய அளவில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 300-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த புகார் மற்றும் 150-160 முதல் தகவல் அறிக்கைகளில் (FIR) அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த சைபர் மோசடி கும்பல், ரூ.27,000 கோடி மதிப்பிலான வங்கி பரிவர்த்தனைகளையும், ரூ.3,000 கோடி மதிப்பிலான ரொக்க பரிவர்த்தனைகளையும் செய்திருக்க வாய்ப்புள்ளதாக புகார்கள் எழுந்தன.
இந்த வழக்கில், அமலாக்கத்துறை கடந்த ஜூலை மாதம் கோவாவிலும் மும்பையிலும் இரண்டு கட்டங்களாக சோதனைகளை நடத்தியது. கடைசியாக ஆகஸ்ட் 21 அன்று நடத்தப்பட்ட சோதனையில், மோசடி நபர்களிடம் இருந்த சுமார் ரூ.3.25 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இணையவழி மோசடி மூலம் பணத்தை இழந்தவர்களின் கணக்குகளை ஆராய்ந்ததில், சம்பந்தப்பட்ட போலி மற்றும் ஏமாற்று நிறுவனங்களில், ஓட்டுநர்களும் ஊழியர்களும் ஒற்றை அறை குடியிருப்புகளில் இயக்குநர்களாக வசித்து வந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஃபஹீம் மொய்ன் மற்றும் நயீம் முயீன் ஆகியோர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பறிக்கப்பட்ட பணம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு, ரொக்கமாக எடுக்கப்பட்டு, பின்னர் இந்திய ரிசர்வ் வங்கியால் உரிமம் பெற்ற பணமாற்று நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு நாணயமாக மாற்றப்பட்டது தெரியவந்தது.
மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை முகமை, அவர்களை மும்பையில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்ட (PMLA) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கோவாவிற்கு அவர்களை அழைத்துச் செல்வதற்காக, அவர்களின் இடைக்காலக் காவலை அமலாக்கத்துறைக்கு (ED) நீதிமன்றம் ஒப்படைத்தது.
இதையடுத்து அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க, கோவாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவர்களை அதிகாரிகள் ஆஜர்படுத்த உள்ளனர்.