

நாடு தழுவிய அளவில் நடைபெற்ற மிகப்பெரிய டிஜிட்டல் கைது மற்றும் இணையதள நிதி மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை (ED) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. சுமார் 30,000 கோடி ரூபாய் அளவிலான சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய இந்த கும்பலின் பின்னணியை கண்டறியும் முயற்சியில், மும்பையைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஃபஹீம் மொயின் ஹுசைன் சயீத் மற்றும் நயீம் முயீன் சயீத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் மும்பையில் வைத்து கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சிறப்பு PMLA நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கோவா மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் பனாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவரை 'டிஜிட்டல் கைது' செய்வதாக மிரட்டி, 'ரகசிய மேற்பார்வை கணக்குகள்' என்ற பெயரில் 2.60 கோடி ரூபாயை மோசடி கும்பல் பறித்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட விசாரணையில்தான், நாடு முழுவதும் பரந்து விரிந்த இந்த மிகப்பெரிய மோசடி நெட்வொர்க் வெளிச்சத்திற்கு வந்தது.
பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகையை வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்து, பின்னர் ரொக்கமாக திரும்பப் பெற்றுள்ளனர். அந்தப் பணத்தை ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்ற அந்நிய செலாவணி முகவர்கள் மூலம் வெளிநாட்டு பணமாக மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழை ஓட்டுநர்கள் மற்றும் எளிய பணியாளர்களை இயக்குநர்களாகக் காட்டி பல போலி நிறுவனங்களை உருவாக்கி இந்த பணமோசடியை அரங்கேற்றியுள்ளனர்.
இந்த நெட்வொர்க் மூலம் ரூ.27,000 கோடி வங்கி பரிவர்த்தனைகளும், ரூ.3,000 கோடி ரொக்கப் பரிவர்த்தனைகளும் நடைபெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவான 150-க்கும் மேற்பட்ட எஃப்.ஐ.ஆர் மற்றும் 300-க்கும் மேற்பட்ட புகார்கள் இதனுடன் தொடர்புடையவை. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மும்பை மற்றும் கோவாவில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.3.25 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.