ரூ.28,000 கோடி ஆன்லைன் மோசடி வழக்கு: மும்பை விமான நிலையத்தில் பிரபல வழக்கறிஞர் கைது

இந்தச் விசாரணையில்தான் ஒட்டுமொத்த நெட்வொர்க்கின் முகமூடி கிழிந்தது.
Digital Arrest
Published on: 
Summary

கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி ரூ.2.60 கோடியை இழந்தது குறித்த புகாரின் அடிப்படையில் கோவா காவல்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

நாட்டை உலுக்கியுள்ள சுமார் 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான அகில இந்திய சைபர் குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் அரெஸ்ட் பணமோசடி வழக்கில், அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பனாஜியைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு, டெல்லிக்குத் தப்பியோட முயன்ற ரஷேஷ் உபத்யாய் என்ற ரஷேஷ் ஷா என்ற வழக்கறிஞரை மும்பை விமான நிலையத்தில் வைத்து மடக்கிப் பிடித்தது. சுங்கத்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் உதவியுடன் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி ரூ.2.60 கோடியை இழந்தது குறித்த புகாரின் அடிப்படையில் கோவா காவல்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இந்தச் விசாரணையில்தான் ஒட்டுமொத்த நெட்வொர்க்கின் முகமூடி கிழிந்தது.

பினாமி இயக்குநர்கள் பெயரில் தொடங்கப்பட்ட தோராயமாக 400-க்கும் மேற்பட்ட போலியான கணக்குகள் மூலம் இந்த மோசடிப் பணம் வளைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தத் தொகையானது ரொக்கமாகப் பெறப்பட்டு, ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெற்ற பணப் பரிமாற்ற மையங்கள் மூலமாக வெளிநாட்டு நாணயங்களாக மாற்றப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சைபர் வலைப்பின்னல்

இந்த மோசடி வலையமைப்பு இதுவரை இந்தியா முழுவதும் உள்ள 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 160-க்கும் மேற்பட்ட வழக்குகளிலும், 300-க்கும் அதிகமான புகார்களிலும் சிக்கியுள்ளது. இதன் ஒட்டுமொத்த வங்கிப் பரிமாற்ற மதிப்பு சுமார் 28,000 கோடி ரூபாயாக இருக்கலாம் என்றும், இதில் சுமார் 2,900 கோடி ரூபாய் வரை ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ரஷேஷ் உபத்யாய், முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து விடுவிப்பதில் முக்கிய இடைத்தரகராகச் செயல்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ள நிலையில், குற்றவாளியைக் காவலில் எடுத்து அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com