துர்கா பூஜை ஊர்வலத்தை வேடிக்கை பார்த்த தலித்துகள் மீது கும்பல் கொலைவெறி தாக்குதல் | Uttar Pradesh

தடிகளும் ஆயுதங்களும் ஏந்தியிருந்த கும்பல் சாதிய வசவுகளால் திட்டியுள்ளது.
துர்கா பூஜை ஊர்வலத்தை வேடிக்கை பார்த்த தலித்துகள் மீது  தாக்குதல்
Published on: 
Summary

துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பலியாவில் கார்வார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாய் ஸ்தான் அருகே அக்டோபர் 21 ஆம் தேதி துர்கா சிலை கரைப்பு ஊர்வலம் சென்றுகொண்டிருந்தது.

அப்போது அங்கு நின்று அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சில தலித்துகளில் பப்பு மற்றும் பங்கஜ் குமார் என்போரை தடிகளும் ஆயுதங்களும் ஏந்தியிருந்த ஒரு கும்பல் சாதிய வசவுகளால் திட்டியுள்ளது.

அப்போது ஹரிந்திரா, அஜித் ஆகிய மேலும் இரு தலித் சமூகத்தினர் தலையிட்டுள்ளனர். இதில் நால்வரையும் ஆயுதங்களால் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியதாகவும் இதில் நால்வரும் காயமடைந்தனர் எனவும் காவல்துறை இன்று தெரிவித்துள்ளது

6 பேர் மீது வழக்குப்பதிவு

சுபாஷ் ராஜ் பார், முகேஷ் ராஜ் பார், பிரதீப், அபய், பிரின்ஸ் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட ஆறு குற்றவாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துணை கண்காணிப்பாளர் சதீஷ் சர்மா தெரிவித்தார்.

சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக சதீஷ் சர்மா மேலும் தெரிவித்தார். அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பியில் தாக்கப்படும் தலித்துகள்

உ.பியில் தலித்துகள் மீதான கும்பல் தாக்குதல் அண்மை காலங்களாக அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் சீதாப்பூர் பகுதியில் உள்ள லுதௌரா கிராமத்திற்கு அருகே மனோஜ் கௌதம் என்ற 35 வயது தலித் நபர் தனது 10 வயது மகளுடன் உள்ளூர் சந்தையிலிருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் தடிகளால் கொடூரமாகத் தாக்கி கொல்லப்பட்டார்.

இந்த மாத தொடக்கதில் ரேபரேலியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஹரியோம் என்ற தலித் இளைஞர் ஒரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

தமிழகம்

அண்மையில் தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் பள்ளியில் சக மாணவர்களும் ஆசிரியரும் சாதியை குறிப்பிட்டு இழிவாக நடத்தியதால் மனமுடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com