ராஜஸ்தான் ரெயில் தண்டவாள குண்டுவெடிப்பு: பாகிஸ்தான் தொடர்புடைய இளம்பெண் உட்பட இருவர் கைது!

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மூலம் இவர்கள் இயக்கப்பட்டுள்ள தாகக் காவல்துறை சந்தேகிக்கிறது.
Arrest
Published on: 

ராஜஸ்தானின் ஸ்ரீகங்கானகரில் உள்ள ராம்சிங்பூர் அருகே கடந்த 3-ந் தேதி இரவு ரெயில் தண்டவாளத்தில் குண்டு வெடித்தது. இதில் 2 ரெயில் ஸ்லீப்பர்கள் நொறுங்கின, தண்டவாளம் சேதமடைந்தது, மேலும், சம்பவம் நடந்த இடத்தில் சுமார் 2.5 அடி ஆழ முள்ள பள்ளமும் உருவானது.

இளம்பெண், வாலிபர் கைது

குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு சுமார் 1¼ நிமிடங்களுக்கு முன்பு, அனுப்கர்-சூரத்கர் பயணிகள் ரெயில் ஒன்று அதே தண்டவாளத்தில் கடந்து சென்றிருந்தது.

அந்த ரெயிலை குறிவைத்து மிகப்பெரிய நாச வேலைக்கு திட்டமிடப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரனை நடத்தினர்.

இதனிடையே இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரை சேர்ந்த இளம்பெண் மகாக்தீப் கவுர்(வயது 21) மற்றும் தவிந்தர் சிங் (22) ஆகிய இருவரையும் ராஜஸ்தான் பயங்கரவாதத் தடுப்புப் படை, ஸ்ரீ கங்காநகர் காவல்துறை மற்றும் பஞ்சாப் காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் கைது செய்துள்ளன.

பாகிஸ்தான் தொடர்பு

கைது செய்யப்பட்ட மகாக் தீப் கவுர், பாகிஸ்தானைச் சேர்ந்த ‘சாச்சா’ மற்றும் ‘ஷா’ ஆகிய 2 பேருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

காதல் வலையில் வீழ்த்தியும், பணம் கொடுத்தும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மூலம் இவர்கள் இயக்கப்பட்டுள்ள தாகக் காவல்துறை சந்தேகிக்கிறது.

மகாக்தீப் கவுரிடமிருந்து 2 துப்பாக்கிகள், 46 தோட்டாக்கள் மற்றும் குண்டு வெடிப்பை நிகழ்த்துவதற்காகப் பெறப்பட்ட ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இவர்களுக்கு உதவி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X