

இந்த விவாத சவாலுக்கான இடத்தை பிரதமரே முடிவு செய்யலாம் என்றும், நடுவராக மோகன் பகவத் அல்லது தொழிலதிபர் கௌதம் அதானியை கூட அமர வைத்துக் கொள்ளலாம் என்றும் ராகுல் காந்தி கிண்டலாகக் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் ஒரு வெளிப்படை விவாத சவாலை விடுத்துள்ளார். பஞ்சாப் மாநிலம் சங்கரூர் நகரில் நடைபெற்ற 'இன்சாப் ராலி' என்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், காங்கிரஸ் கட்சி தேசவிரோதமானது என்று பிரதமர் மோடி முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடியை நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைத்துள்ள ராகுல் காந்தி, தானும் மோடியும் ஒரு மேசையில் அமர்ந்து விவாதித்தால், ஐந்தே நிமிடத்தில் பிரதமர் மோடிதான் உண்மையான தேசவிரோதி என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என்று ஆக்ரோஷமாகத் தெரிவித்தார்.
இந்த விவாத சவாலுக்கான இடத்தை பிரதமரே முடிவு செய்யலாம் என்றும், நடுவராக மோகன் பகவத் அல்லது தொழிலதிபர் கௌதம் அதானியை கூட அமர வைத்துக் கொள்ளலாம் என்றும் ராகுல் காந்தி கிண்டலாகக் குறிப்பிட்டார். பிரதமர் மோடி விவசாயிகளையும், சிறு குறு தொழிலதிபர்களையும் புறக்கணித்துவிட்டு, நாட்டின் ஒட்டுமொத்த நிலங்கள், உள்கட்டமைப்பு மற்றும் விமான நிலையங்களை தொழிலதிபர் கௌதம் அதானிக்கு தாரை வார்த்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசும்போது தங்களது மைக்குகள் வேண்டுமென்றே அணைக்கப்படுவதாகவும், விவாதம் நடத்த அரசு அழைப்பு விடுத்தாலும் பேசுவதற்கு உரிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்றும் அவர் சாடினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கட்டுப்பாட்டில்தான் பிரதமர் மோடி இயங்கி வருவதாகவும் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பிறகு தனது அமைச்சரவையையோ அல்லது மூத்த அதிகாரிகளையோ கலந்தாலோசிக்காமல் அவசரமாக அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டதாகவும், இதன் மூலம் இந்தியாவின் விவசாயிகளையும், சிறு தொழில்களையும் அமெரிக்காவிடம் பறிகொடுத்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்தியா-பாகிஸ்தான் போர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கருத்து தெரிவித்தும், அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசத் திராணியில்லாமல் பிரதமர் மோடி மவுனம் காப்பதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, அதானி மீது அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்குகளும் இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பின்னர்தான் கைவிடப்பட்டதாக தெரிவித்தார்.