

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரின் தைரியம், எளிமை, பணிவு மற்றும் பொதுச் சேவையில் அவரின் அசைக்க அர்ப்பணிப்பு ஆகியவை நாட்டு மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.
தனது பொது வாழ்க்கையில், பல ஆண்டுகளாக நாட்டுக்காக அவர் சிறந்த சேவையாற்றி வருகிறார். குறிப்பாக, பின்தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்டோரின் நல்வாழ்க்கைக்காக சேவையாற்றி வருகிறார். அவரது உறுதியான அர்ப்பணிப்பு, இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் ஊக்கமளிக்கக் கூடியதாய் இருந்து வருகிறது.
அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் தேசத்துக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும். மேலும், ஒடிஸாவில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அவரைச் சந்திக்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிற்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்," மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
எளிய தொடக்கத்திலிருந்து இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனது வரையிலான உங்கள் பயணம், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு உத்வேகமாக விளங்குகிறது. உங்கள் பொது வாழ்க்கை பணிவு, விடாமுயற்சி மற்றும் அமைதியான வலிமையால் நிறைந்துள்ளது.
உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க வாழ்த்துகிறேன்" என்றார்.