

பிரதமர் மோடி இன்று டெல்லியில் பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்களுக்கான தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, பா.ஜ.க தேசிய தலைவர் நிதின் நபின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
ஊடகங்களுடன் எனக்கு நீண்டகால தொடர்பு உண்டு. இதுபோன்ற நிகழ்வுகளில் நான் நாற்காலிகளை அடுக்கி வைக்கும் பணியைச் செய்த காலத்திலிருந்தே இந்த தொடர்பு நீடிக்கிறது.
செய்தி அறிக்கைகள் என்ற காலத்தில் இருந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் வரை ஊடகங்களின் பரிணாம வளர்ச்சியை நான் பார்த்து வருகிறேன். செய்தி உலகில் எதுவும் சாத்தியமற்றது என்று கருதப்படுவதில்லை.
நெருக்கடி மற்றும் பேரிடர் காலங்களில் கூட கள நிருபர்கள் எல்லா இடங்களுக்கும் சென்றடைகிறார்கள். பண்டிகைக் காலங்களில் அனைவரும் குடும்பத்துடன் நேரம் செலவிட முயற்சிக்கிறார்கள்.
ஆனால் பத்திரிகையாளர்கள் எப்போதும் முக்கியச் செய்திகளுக்காகப் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
முன்பு இந்தியாவின் ஒவ்வொரு தெருவிலும் ஒரு கிரிக்கெட் நிபுணர் இருந்தார். இப்போது எல்லா இடங்களிலும் ஒரு செய்தி நிபுணர் இருக்கிறார். கருத்துகளின் பன்முகத்தன்மை தான் நமது ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
அதில் இந்திய ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 21-ம் நூற்றாண்டில் தகவல் பரிமாற்றமே மிக வலிமையான கருவியாகும். எனவே இந்தியாவின் கதையை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நான் ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
அதேபோல் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் நான் ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன். சமூக முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களுக்கும் தேசிய ஒற்றுமை தொடர்பான விஷயங்களுக்கும் ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்தால் வளர்ந்த இந்தியாவை நோக்கிய நமது பயணம் வேகமெடுக்கும்.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக நாம் அனைவரும் இணைந்து மாற்றுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.