2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி டிசம்பரில் கனடாவுக்கு செல்கிறார்

பிரதமர் மோடியின் பயணத் தேதியை கனடா பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on: 

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக வருகிற டிசம்பர் மாதம் கனடாவுக்கு செல்ல உள்ளார். சமீபத்தில் மோடியும், கனடா பிரதமர் மார்க் கார்னியும் தொலைபேசியில் உரையாடிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதுதொடர்பாக கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

பிரதமர் மோடி வருகிற டிசம்பர் 11 மற்றும் 12-ந்தேதிகளில் கனடாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். சமீபத்திய மோடி- கனடா பிரதமர் மார்க் கார்னியின் தொலைபேசி உரையாடலில், இரு நாடுகளின் உறவுகளில் உள்ள நேர்மறையான உத்வேகத்தை மேலும் வலுப்படுத்தவும், வர்த்தகம், எரிசக்தி, தொழில் நுட்பம், பாதுகாப்பு மற்றும் மக்கள்- மக்களுக்கு இடையேயான உறவுகளில் உறுதியான முடிவுகளை நோக்கிச் செயல்படவும் ஒப்புக் கொண்டனர் என்று தெரிவித்து உள்ளது.

அதேபோல் கனடா பிரதமர் மார்க் கார்னி, கால்கரியில் உள்ள ஒரு உணவகத்தில் பொது மக்களுடன் உரையாடியபோது பிரதமர் மோடியின் பயணத் தேதியை உறுதிப்படுத்தினார்.

அப்போது அவர் கூறும்போது, நான் இந்திய பிரதமர் மோடியிடம் பேசினேன். அவரது கனடா இந்தப் பயணம் டொராண்டோ, ஒட்டாவா ஆகிய நகரங்களில் நடைபெறும், இந்தப் பயணத்தில் இரு நாடுகளின் உறவுகளை இன்னும் விரிவுபடுத்த ஆலோசிப்போம் என்றார்.

இந்தியா- கனடா இடையே விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இதன் மூலம் 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரு மடங்காக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடியின் கனடா பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

X

Maalai Malar
www.maalaimalar.com