பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ சந்திப்பு: கிளவுட், ஏஐ தொழில்நுட்பங்களில் கூடுதல் ரூ.1.08 லட்சம் கோடி முதலீடு!

அமேசான் இதுவரை இந்தியாவில் 28 லட்சம் வேலைவாய்ப்புகளை ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
PM Modi meets Amazon CEO
Published on

உலகளாவிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாசி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அமேசான் நிறுவனம் கூடுதலாக சுமார் ரூ.1.08 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட முதலீடுகளுடன் சேர்த்து, வரும் 2026 முதல் 2030 வரையிலான ஐந்தாண்டுகளில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.4 லட்சம் கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

கிளவுட் மற்றும் ஏஐ உள்கட்டமைப்பு:

இந்த கூடுதல் முதலீட்டின் பெரும் பகுதி அமேசான் வெப் சர்வீசஸ் மூலம் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள டேட்டா சென்டர்களின் திறனை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும். இதன் மூலம் இந்திய ஸ்டார்ட்-அப்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் அதிநவீன ஏஐ சிப்கள் மற்றும் பாதுகாப்பான கிளவுட் மென்பொருட்களைப் பெற முடியும்.

38 லட்சம் வேலைவாய்ப்புகள்:

இந்த புதிய திட்டங்களின் மூலமாக, இந்தியாவில் வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் 38 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க ஆதரவளிக்க உள்ளதாக ஆண்டி ஜாசி உறுதியளித்துள்ளார். (அமேசான் இதுவரை இந்தியாவில் 28 லட்சம் வேலைவாய்ப்புகளை ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது).

இ-காமர்ஸ் ஏற்றுமதி மற்றும் சிறு வணிகங்கள்:

2030-க்குள் இந்தியாவின் ஒட்டுமொத்த இ-காமர்ஸ் ஏற்றுமதியை ரூ.6,68,000 கோடி அளவிற்கு உயர்த்த அமேசான் இலக்கு வைத்துள்ளது. மேலும், 1.5 கோடி சிறு வணிகங்களுக்கு ஏஐ தொழில்நுட்பப் பலன்களைக் கொண்டு சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதிவேக விநியோகக் கட்டமைப்பு விரிவாக்கம்:

இந்தியாவின் நுகர்வோர் தேவையைப் பூர்த்தி செய்ய, இந்த ஆண்டிற்குள் 20-க்கும் மேற்பட்ட புதிய கிடங்குகளையும், 100-க்கும் மேற்பட்ட விநியோக மையங்களையும் அமேசான் திறக்கவுள்ளது. இதன் மூலம் 3 மற்றும் 4-ஆம் கட்ட நகரங்களிலும் நிமிடங்களில் அல்லது சில மணிநேரங்களில் டெலிவரி செய்யும் சேவை விரிவுபடுத்தப்படும்.

மாணவர்களுக்கான ஏஐ கல்வி:

அமேசான் நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள 40 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏஐ கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

இச்சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது 'X' தளத்தில், "அமேசான் நிறுவனத்தின் இந்த சாதனை அளவிலான முதலீட்டை வரவேற்கிறேன். இது நமது இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளுக்கு இருக்கும் ஆர்வத்தை மீண்டும் நிரூபித்துள்ளது"எனப் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com