

அனைத்து அரசு திட்டங்கள் மற்றும் செயல்திட்டங்களின் பலன்கள் தகுதியுள்ள ஒவ்வொருவருக்கும் சென்றடைவதை உறுதி செய்யவும், சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பாடுபடவுமாறு பிரதமர் நரேந்திர மோடி அனைத்து அமைச்சர்களையும் கேட்டுக்கொண்டார்.
சிந்தன் ஷிவிர் கூட்டத்தில், தலா எட்டு அமைச்சர்களை கொண்ட எட்டு குழுக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த குழுக்கள், சுய செயல்திறனை மேம்படுத்துதல், திட்ட செயலாக்கம், திறம்பட்ட தகவல் தொடர்பு மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான ஆளுகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தன.
பிரதமர் ஒவ்வொரு குழுவுடனும் தனித்தனியாக கலந்துரையாடியதாகவும், சேவா தீர்த்தத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் அமர்வு கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் இன்று (வியாழக்கிழமை) இந்த நிகழ்வை மீண்டும் தொடங்குவார்கள்.
“பிரதமர் ஒவ்வொரு மேசைக்கும் சென்று கலந்துரையாடலில் பங்கேற்றதோடு, ஆலோசனைகளையும் வழங்கினார். இது முற்றிலும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
எதிர்காலத்தில் இதுபோன்ற அமர்வுகள் மேலும் நடத்தப்படும். அனைத்து கலந்துரையாடல்களும் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, ஒட்டுமொத்த வளர்ச்சியை மையமாக கொண்டிருந்தன,” என்று ஓர் வட்டாரம் தெரிவித்தது.
இரண்டு நாள் ஆலோசனை கூட்டமானது, தற்போதைய நிலையை மதிப்பிடுதல், ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், அரசின் எதிர்கால செயல்திட்டங்களை தயாரித்தல், எதிர்கால திட்டமிடல் மற்றும் நலத்திட்டங்களில் நடைபெற்று வரும் பணிகளை மீளாய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நோக்கமாக கொண்டுள்ளது.
இதேபோன்ற ஒரு கூட்டம் அடுத்த வாரமும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 அக்டோபர் 21-ஆம் தேதியன்றும் இதேபோன்ற ஒரு பயிற்சி நடத்தப்பட்டது.
அப்போது, ஆளுகை மற்றும் கொள்கை வகுத்தல் ஆகியவற்றில் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின. அரசாங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அமைச்சர்கள் நன்கு புரிந்துகொள்ள உதவுவதே இந்த பயிற்சியின் நோக்கமாகும்.