

முன்னாள் முதலமைச்சர் நிதிஷ் குமார் பெயரில் இப்பாலத்திற்கு 'நிதிஷ் சேது' எனப் பெயரிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவிற்குப் பிறகு பாலத்தின் மீது சிறிது தூரம் நடந்த பிரதமர் மோடி, கம்சாவை அசைத்து பொதுமக்களை உற்சாகப்படுத்தினார்.
பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய ஆறு வழிப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். முன்னாள் முதலமைச்சர் நிதிஷ் குமார் பெயரில் இப்பாலத்திற்கு 'நிதிஷ் சேது' எனப் பெயரிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவிற்குப் பிறகு பாலத்தின் மீது சிறிது தூரம் நடந்த பிரதமர் மோடி, கம்சாவை அசைத்து பொதுமக்களை உற்சாகப்படுத்தினார்.
சுமார் ரூ. 4,280 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆறு வழித் திட்டம், வைஷாலி மாவட்டத்தின் பிதுபூர் பகுதியையும் பாட்னா புறநகர்ப் பகுதியான கச்சி தர்காவையும் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 22-இல் உள்ள கச்சி தர்காவையும், தேசிய நெடுஞ்சாலை 322-இல் உள்ள பிதுபூரையும் இணைக்கும் வகையில் 9.76 கி.மீ. நீளமுள்ள பிரதான பாலமும், 10 கி.மீ. நீள அணுகு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் நிதிஷ் குமார் காலத்தில் முன்னெடுக்கப்பட்டு நிறைவு கட்டத்தை எட்டிய இத்திட்டத்திற்கு, அவரை கௌரவிக்கும் விதமாக 'நிதிஷ் சேது' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
திறப்பு விழாவிற்குப் பின் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன், பீகார் முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி, மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் மற்றும் துணை முதலமைச்சர் விஜய் குமார் சவுத்ரி ஆகியோருடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி பாலத்தில் நடந்து சென்றார். இத்திட்டம் தொடர்பான காணொலிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
பாட்னா மற்றும் ஹாஜிபூர் இடையே உள்ள 40 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மகாத்மா காந்தி சேது பாலத்தில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல், 'நிதிஷ் சேது' பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் தெற்கு பீகார் இடையிலான பயண நேரம் குறையும் நிலையில், குறிப்பாக ராகோபூர் தியாரா பகுதி மக்கள் பாட்னாவிற்குச் சென்று கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பெறுவது எளிதாகும்.
மேலும், விவசாய விளைபொருட்கள் மற்றும் தொழிற்சாலைப் பொருட்களின் போக்குவரத்தை எளிதாக்குவதன் மூலம் சந்தைகளுக்கான அணுகல் மேம்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். பிதுபூர் - கச்சி தர்கா வழித்தடம் சுற்றுலா மற்றும் சரக்குப் போக்குவரத்து மையமாக உருவெடுக்கும் திறன் கொண்டதாக உள்ளதால், முதலீட்டாளர்களை ஈர்த்து பீகார் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இத்திட்டம் வலு சேர்க்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.