

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
மகளிர் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்ற பருல் சௌத்ரிக்கு வாழ்த்து தெரிவித்த மோடி, அவரது வெற்றி வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டார்.
"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 5000 மீட்டர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பருல் சௌத்ரிக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக உள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்," என்று மோடி 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார்.
ஈட்டி எறிதல் போட்டியில் ஒரே நேரத்தில் இரு இந்திய வீரர்கள் பதக்கம் வென்றதை மோடி பாராட்டினார். இதில் யஷ்வீர் தனது சிறந்த தனிப்பட்ட சாதனையாக 85.72 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கத்தையும், ரோஹித் 84.35 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.
"ஆசிய விளையாட்டு போட்டிகளின் பதக்க மேடையில் இரண்டு இந்திய ஈட்டி எறிதல் வீரர்கள்! தனிப்பட்ட சிறந்த சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற யஷ்வீர் சிங் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற ரோஹித் யாதவ் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
இரு விளையாட்டு வீரர்களுக்கும் இந்திய தடகளத் துறைக்கும் இது ஒரு அற்புதமான முடிவாகும். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்," என்று மோடி பதிவிட்டார்.
மகளிர் 78 கிலோ குராஷ் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற பிங்கி பல்ஹாராவையும் பிரதமர் பாராட்டினார்; அவரது "உறுதி மற்றும் மனவலிமையை" புகழ்ந்த அவர், அவருக்கு மேலும் பல வெற்றிகள் கிடைக்க வாழ்த்தினார்.
"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 78 கிலோ குராஷ் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற பிங்கி பல்ஹாராவுக்கு வாழ்த்துகள். அவர் போட்டி முழுவதும் அபாரமான உறுதியையும் மனவலிமையையும் வெளிப்படுத்தினார். அவர் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி, வருங்காலத்தில் மேலும் பல பெருமைகளை தேடித்தரட்டும்," என்று அவர் கூறினார்.
மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீராங்கனை ஈஷா சிங்கும் பிரதமரின் பாராட்டை பெற்றார். அவரது துல்லியம் மற்றும் நிதானத்தை பிரதமர் பாராட்டினார்.
"ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற ஈஷா சிங்கிற்கு வாழ்த்துகள். சிறந்த ஸ்கோருடன், ஈஷா அபாரமான துல்லியத்தையும் நிதானத்தையும் வெளிப்படுத்தினார். அவர் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்," என்று மோடி பதிவிட்டார்.
இப்போட்டிகளின் தொடக்கத்தில் தனிநபர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தகுதி பெறும் வாய்ப்பை இழந்த ஈஷா, 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் பதக்கம் வென்று அசத்தினார்.
நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்ற ஸ்ரீசங்கர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மற்றொரு பதக்கத்தை வென்றதையடுத்து, மோடி அவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். பாலக்காட்டை சேர்ந்த 27 வயதான இவர், 8.07 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
ஹாங்சூ ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளிலும் ஸ்ரீசங்கர் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"முரளி ஸ்ரீசங்கருக்கு ஆசிய விளையாட்டு போட்டியில் மற்றொரு பதக்கம்! அவரது சிறப்பான பாய்ச்சல், ஆண்களுக்கான நீளம் தாண்டும் போட்டியில் அவருக்குப் பதக்க மேடையில் இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. அவருக்கு வாழ்த்துகள். அவர் இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்."