

தமிழ்நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிதியுதவியாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கார் ஒன்று மரத்தின் மீது மோதிய விபத்தில், அதில் பயணித்த 8 பேர் உயிரிழந்தனர்; இருவர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் நிகழ்ந்த விபத்தில் உயிர் இழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிதியுதவியாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், "திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் - முசிறி நெடுஞ்சாலையில் கொத்தூர்பட்டி நால்ரோடு அருகில் இன்று (22.11.2026) மாலை கார் மரத்தில் மோதிய விபத்தில், அக்காரில் பயணம் செய்த தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, மகாராஜபுரத்தை சேர்ந்த ஆ. சக்திவேல் (வயது 45) உள்ளிட்ட ஐந்து நபர்கள் நிகழ்விடத்திலேயும், படுகாயங்களுடன் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மூன்று நபர்களும் என மொத்தம் 8 நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்," இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.