UPI கட்டணம்: டிரம்ப் முன் அடிபணிய பிரதமர் முடிவு செய்துள்ளார்- ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு

வணிகம் தொடர்பான பண பரிமாற்றத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேல் பயன்படுத்தினால் 0.4 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.
UPI- Rahul Gandhi
UPI- ராகுல் காந்தி
Published on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன் மண்டியிடவும் (அடி பணியவும்), அமெரிக்காவிற்குப் பெருந்தொகையை வழங்கவும் பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, UPI பரிவர்த்தனைகள் மீது கட்டணம் விதிக்கும் அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

UPI கட்டணம் அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் அமல்

வங்கிக் கணக்கை பயன்படுத்தாமல் பண பரிமாற்றம் செய்ய மத்திய அரசு UPI என்ற நடைமுறையை கொண்டு வந்தது. இதை பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை ஒரு விநாடியில் செலுத்த முடியும். இதன்மூலம் சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை UPI பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் வணிக நோக்கத்திற்காக 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணி பரிவர்த்தனை செய்தால், வணிக நிறுவனம் 0.4 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு நேற்று தெரிவித்தது. அக்டோபர் 15-ந்தேதியில் இருந்து இது அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த மாதம் 15-ந்தேதியில் இருந்து ஒரு வணிக நிறுவனத்தில் நுகர்வோர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்து, UPI மூலம் பணம் செலுத்தினால் அந்த வணிக நிறுவனம், 0.4 சதவீதம் என்ற அடிப்படையில் கட்டணம் வங்கிக்கு செலுத்த வேண்டும். அதேவேளையில் தனிநபர் ஒருவர் மற்றொருவருக்கு பணம் பரிமாற்றம் செய்தால் கட்டணம் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அத்துடன் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன் பிரதமர் மோடி மண்டியிட முடிவு செய்துள்ளார் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஜியிடம் ஒருமுறை அவர் இடதுசாரி கொள்கை கொண்டவரா அல்லது வலதுசாரி கொள்கை கொண்டவரா என்று கேட்கப்பட்டபோது, ​​நான் இடதுபுறமோ அல்லது வலதுபுறமோ சாய்வதில்லை. நான் நேராக நிற்கிறேன் என்று பதிலளித்தார். ஆனால் மோடி ஜியின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டது. அவர் இடதுசாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல. அவர் டொனால்டு டிரம்ப் முன் நேராகப் படுத்துக்கொண்டு மண்டியிட (சாஷ்டாங்கமாகப் பணிய) முடிவு செய்துள்ளார்.

UPI-க்கு வரி விதிப்பதன் மூலமும், அமெரிக்காவிற்குப் பெருந்தொகையை வழங்குவதன் மூலமும் ஒவ்வொரு இந்தியர் மீதும் அவர் (மோடி) வரியை சுமத்தியுள்ளார். மோடி ஜி, இப்போதே UPI வரியை திரும்பப் பெறுங்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

இதற்கு முன்னதாக காங்கிரஸ், ஜீரோ MDR (வணிகர் தள்ளுபடி விகிதம்) முறையை நீக்கிவிட்டு UPI-க்குக் கட்டணம் விதிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு அரசு பணிந்து விட்டது. பிரதமர் மோடி, NOTA (நோட்டா)வை நரேந்திராவின் தொடர்ச்சியான டிரம்ப் சமாதான நடவடிக்கை (Narendra's Ongoing Trump Appeasement) என்று வரையறுத்துள்ளார் எனத் தெரிவித்திருந்தது.

பிரதமர் மோடி அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து சமரசம் செய்து கொண்டுள்ளார். மீண்டும் ஒருமுறை சரணடைகிறார். ராகுல் காந்தி முன்னதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்த பாஜக, காங்கிரஸ் போலிச் செய்திகளை பரப்புவதாகக் குற்றம் சாட்டியதுடன், நுகர்வோர் மீது MDR கட்டணங்கள் விதிக்கப்படாது என்பதை அரசு மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளதாகவும் கூறியது.

X

Maalai Malar
www.maalaimalar.com