

அணுக்கரு இணைவு ஆற்றலை பெற வேண்டுமானால், பொருளின் நான்காவது நிலையான 'பிளாஸ்மா'வை மிக அதிக வெப்பநிலைக்கு உயர்த்த வேண்டும்.
சூரியனில் ஆற்றல் உருவாகும் அதே அணுக்கரு இணைவு முறையை பயன்படுத்தி, பூமியிலேயே முடிவில்லாத தூய்மையான ஆற்றலை உருவாக்கும் "செயற்கை சூரியன்" திட்டத்தில் இந்தியா மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. குஜராத்தின் காந்திநகரில் உள்ள பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் இயங்கி வரும் 'எஸ்.எஸ்.டி-1' டோகாமாக் அணுக்கரு இணைவு உலையில் 82.6 ஜிகாஹெர்ட்ஸ், 400 கிலோவாட் திறன் கொண்ட புதிய 'கைரோட்ரான்' சாதனம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு இயக்கப்பட்டுள்ளது.
அணுக்கரு இணைவு ஆற்றலை பெற வேண்டுமானால், பொருளின் நான்காவது நிலையான 'பிளாஸ்மா'வை மிக அதிக வெப்பநிலைக்கு உயர்த்த வேண்டும். இந்திய விஞ்ஞானிகள் ஏற்கனவே 20 கோடி டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான பிளாஸ்மா வெப்பநிலையை எட்டி சாதனை படைத்துள்ளனர். இது சூரியனின் மையப்பகுதியை விட சுமார் 20 மடங்கு அதிக வெப்பமாகும்.
இருப்பினும், இந்த மிக அதிக வெப்பநிலையை கொண்ட பிளாஸ்மாவை நீண்ட நேரம் சீராகப் பராமரிப்பதே விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த சவாலை எதிர்கொள்ளவே 'கைரோட்ரான்' என்ற உயர் சக்தி மைக்ரோவேவ் சாதனம் நிறுவப்பட்டுள்ளது. இது பிளாஸ்மாவை அதிவேகமாகவும் சீராகவும் வெப்பப்படுத்த உதவும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.
புதிய கைரோட்ரான் சாதனம் 20 மீட்டர் நீளமுள்ள அலைக்கற்றை கடத்தும் பாதை வழியாக எஸ்.எஸ்.டி-1 உலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. உயர் மின்னழுத்த சோதனைகள், குளிர்ந்த நீர் சுழற்சி அமைப்புகள் மற்றும் மின் இணைப்புகள் அனைத்தும் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு இந்த சாதனம் வெற்றிகரமாகச் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, 150 முதல் 300 கிலோவாட் மின் திறனை பயன்படுத்தி பிளாஸ்மாவைத் தயாரிக்கும் கட்டத்திலும் வெப்பப்படுத்தும் கட்டத்திலும் இக்கருவி சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. மேலும், காந்தப்புலத்தின் மாறுபட்ட அளவுகளிலும் இந்த அமைப்பு துல்லியமான முடிவுகளை வழங்கி சாதனை படைத்துள்ளது.
இந்த அதிநவீனத் தொழில்நுட்பம் இந்தியா சொந்தமாக ஆற்றல் உற்பத்தியில் தற்சார்பு அடைய உதவுவதுடன், உலகளாவிய அணுக்கரு இணைவு ஆராய்ச்சியிலும் இந்தியாவின் இடத்தை உயர்த்தியுள்ளது. பிரான்ஸில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய 'ஈட்டர்' சர்வதேச செயற்கை சூரியன் திட்டத்திலும் இந்தியா முக்கியப் பங்கு வகித்து வருகிறது. குஜராத்தில் எட்டப்பட்டுள்ள இந்த முன்னேற்றம், எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் மாசற்ற, வரம்பற்ற மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.