

எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளவிருக்கும் உச்ச நீதிமன்றம் நோக்கிய பேரணியை முன்னிட்டு, இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ஆறு மெட்ரோ நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டிருக்கும் என்று டெல்லி மெட்ரோ ரெயில் கழகம் 'எக்ஸ்' தளத்தில் தெரிவித்துள்ளது.
படேல் சௌக், ஜன்பத், ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செக்ரடேரியட் மற்றும் பரகம்பா சாலை ஆகிய ஆறு மெட்ரோ நிலையங்களிலேயே இந்த நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டிருக்கும் என்று மெட்ரோ ரெயில் கழகம் கூறியுள்ளது.
"பாதுகாப்பு அமைப்புகள் நிலைமையை ஆய்வு செய்து, அதற்கேற்ப தேவையான தகவல்களை பகிர்ந்துகொள்ளும். இருப்பினும், சம்பந்தப்பட்ட அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் வழித்தடம் மாறும் வசதி தொடர்ந்து செயல்படும்," என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.
இன்று (திங்கள்கிழமை) எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி நடத்தவுள்ளன. இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர், 'வாக்குத் திருட்டு' தொடர்பான விவகாரத்தை எழுப்புவதற்காக இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்தை சந்திக்க முயற்சிக்க உள்ளனர்.
எனினும், 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரங்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்கத் தலைமை நீதிபதி மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.